உடுமலை:உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை நீர் இருப்பு திருப்தியாக உள்ளதால், கடந்தாண்டை போலவே, நடப்பாண்டும், பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, வரும் 16 முதல் நீர் திறக்கப்படுகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வழியாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.வழக்கமாக அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு ஜூன் மாதமும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, ஆக., மாதமும் நீர் திறக்கப்படும். பருவ மழைகள் குறைவு, நீர் நிர்வாக குளறுபடி காரணமாக, பாசன காலம் குறைந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு, பருவ மழைகள் திருப்தியாக கிடைத்து, அணைக்கு நீர்வரத்து மற்றும் இருப்பு காரணமாக, பழைய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள ராஜவாய்க்கால்களுக்கு, மே 16ல் தண்ணீர் திறக்கப்பட்டு, குறுவை, சம்பா சாகுபடிக்கு நீர் வழங்கப்பட்டது.அணை கட்டப்பட்ட, 1968ம் ஆண்டிலிருந்து, கடந்தாண்டு, முதல் முறையாக மே மாதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்தை பொருத்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஜூன் மாதம், முதல் நீர் வழங்கப்பட்டது.பருவ மழைகள் அதிகரிப்பு காரணமாக, கடந்தாண்டு அணை நான்கு முறை நிரம்பியது. கடந்தாண்டு, பருவ மழைகளால் கிடைத்த நீர், பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டதோடு, வழியோர குளம், குட்டைகளுக்கும் நீர் வழங்கப்பட்டது.நீர்மட்டம் திருப்திநடப்பாண்டும், அணை நீர்மட்டம் திருப்தியாக உள்ளதோடு, தென்மேற்கு பருவ மழையும் முன்னதாகவே துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், நடப்பாண்டும், மே 16 முதல், பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கடத்துார், கணியூர், காரத்தொழுவு ஆகிய எட்டு ராஜவாய்க்கால்களுக்குட்பட்ட, 7 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்க,விவசாயிகள் பரிந்துரை அடிப்படையில், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், நடப்பாண்டு பழைய ஆயக்கட்டு பாசனத்தில், இரண்டு போகம் நெல் சாகுபடி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:அணை நீர்மட்டம், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தேவையான அளவு உள்ளதோடு, தென்மேற்கு பருவ மழையும் முன்னதாகவே துவங்கி, இயல்பை விட கூடுதலாக இருக்கும் வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதனால், பழைய ஆயக்கட்டு பாசனம், 8 ராஜவாய்க்கால் பாசனத்தின் கீழ் பயன்பெறும், 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, வரும், 16 முதல், நீர் திறக்க, கருத்துரு தயாரித்து, அரசு அனுமதி வழங்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்ததும், நீர் திறக்கப்படும். அதே போல், மீதமுள்ள, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும், அணை நீர் இருப்பு, பருவ மழை வரத்து அடிப்படையில், கடந்தாண்டை போல், நீர் திறக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.அணை நீர்மட்டம்நேற்று காலை நிலவரப்படி, அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 56.79 அடி நீர்மட்டம் இருந்தது. நீர்இருப்பு, மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 1,536.22 மில்லியன் கனஅடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 12 கனஅடியாகவும், வெளியேற்றம், 12 கன அடியாகவும் இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE