உடுமலை;தென்னையில் ஊடுபயிராக, 'வெனிலா' சாகுபடி செய்ய, 'ஸ்பைசஸ் போர்டு' வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, மானிய திட்டங்களை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. பல லட்சம் தென்னை மரங்கள் நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனால், கடந்த சில மாதங்களாக, தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
தென்னந்தோப்புகளில் விற்பனை செய்யப்படாமல், பல லட்சம் தேங்காய்கள் தேங்கியுள்ளது.நிலையில்லாத விலையால், விவசாயிகள் பாதித்து வருகின்றனர். இருப்பினும், ஆண்டுதோறும் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையை சீராக்க தென்னந்தோப்புகளில், ஊடுபயிர் சாகுபடி செய்து, வருவாய் இழப்பை தவிர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், போதிய வழிகாட்டுதல் இல்லாததால், திணறி வருகின்றனர்.கைகொடுக்குமா?உடுமலை, பொள்ளாச்சி பகுதியில், முன்பு, மத்திய அரசின், 'ஸ்பைசஸ் போர்டு' சார்பில், தென்னையில், ஊடுபயிராக, வெனிலா சாகுபடி செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.'வெனிலா பீன்ஸ்' எனப்படும் இவ்வகை பீன்ஸ்கள் வாசனைப்பொருளாக வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஐஸ்கீரிம், புரதபொருட்கள் தயாரிப்பில், வாசனைக்காக வெனிலா பயன்படுகிறது.
மிதமான தட்பவெப்ப நிலை நிலவும் பொள்ளாச்சி, உடுமலை பகுதி விவசாயிகள் வெனிலா பயிரிட அதிக ஆர்வம் காட்டினர். இந்நிலையில், விலை வீழ்ச்சி மற்றும் தொடர் வழிகாட்டுதல் இல்லாததால், இச்சாகுபடியில் ஈடுபட தயக்கம் காட்டினர்.விவசாயிகள் கூறியதாவது: உடுமலை பகுதியில், பரிசோதனை அடிப்படையில், சில விவசாயிகள், வெனிலா சாகுபடி செய்தனர். தென்னை மரங்களுக்கிடையே ஊடுபயிராக வெனிலா பயிரிட, முதலில் குறிப்பிட்ட இடைவெளியில் கொடியை தாங்கும் தாங்கு மரங்களை பயிர் செய்ய வேண்டும்.
இவ்வகை மரங்கள் 'கிளைசெரிடியா' என அழைக்கப்படுகிறது. மரங்கள் ஆறு மாதத்தில் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்தவுடன் வெனிலா கொடிகளை பயிரிட வேண்டும்.அறுவடையை துவக்க மூன்று ஆண்டுகளானது. இவ்வாறு, விவசாயிகள் வெனிலா சாகுபடியை முயற்சித்த நிலையில், சந்தை வாய்ப்புகள் இல்லாதது, விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால், வெனிலா சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.தற்போது, அரசு, சாகுபடிக்கு வழிகாட்டுதல் வழங்கி, நேரடியாக வெனிலா கொள்முதல் செய்தால், தென்னை விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீள்வார்கள். இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE