சென்னை,:உள்ளீட்டு வரி ஆதாயத்திற்காக போலி விலைப் பட்டியல் தயாரித்து, அரசுக்கு 5.67 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியவரை, வணிக வரித் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
வணிக வரித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையைச் சேர்ந்த, 'ஸ்ரீ சாய் பாலாஜி இம்பெக்ஸ்' நிறுவனத்தில், வணிக வரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஆய்வின் போது, பிற நபர்களின் பெயரில் போலியான, ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்று, பல்வேறு வணிக நிறுவனங்களை துவக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் வாயிலாக, உண்மையான பொருட்களை அனுப்பாமல், உள்ளீட்டு வரி பெறுவதற்காக, போலி விலைப் பட்டியல்கள் அளித்தது தெரிய வந்தது.போலி விலைப் பட்டியல்களை, பல்வேறு நிறுவனங்கள் தவறுதலாக பயன்படுத்த உதவியதன் காரணமாக, தமிழக அரசுக்கு, 5 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, நிறுவன உரிமையாளர் மதுரவாயல் சீனிவாசன் வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஐந்து வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE