சீரமைப்பு: சித்தலூர் புறவழிச்சாலை ரவுண்டானா...ரூ. 2 கோடி மதிப்பில் பணிகள் தீவிரம்| Dinamalar

சீரமைப்பு: சித்தலூர் புறவழிச்சாலை ரவுண்டானா...ரூ. 2 கோடி மதிப்பில் பணிகள் தீவிரம்

Added : மே 13, 2022 | |
விருத்தாசலம்,-விருத்தாசலம் புறவழிச்சாலை சித்தலுார் ரவுண்டானாவில், விபத்துகளை தவிர்க்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2 கோடி ரூபாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பஸ், லாரி, வேன் மற்றும் என்.எல்.சி., இந்தியா நிறுவனம், தனியார்,
 சீரமைப்பு: சித்தலூர் புறவழிச்சாலை ரவுண்டானா...ரூ. 2 கோடி மதிப்பில் பணிகள் தீவிரம்

விருத்தாசலம்,-விருத்தாசலம் புறவழிச்சாலை சித்தலுார் ரவுண்டானாவில், விபத்துகளை தவிர்க்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2 கோடி ரூபாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பஸ், லாரி, வேன் மற்றும் என்.எல்.சி., இந்தியா நிறுவனம், தனியார், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், சிமென்ட் ஆலைகள், சேலம் இரும்பு உருக்காலை போன்ற தொழிற்சாலைகளுக்கு நுாற்றுக்கணக்கில் கனரக வாகனங்கள் செல்கின்றன.நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், 10 ஆண்டுகளுக்கு முன் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து வேப்பூர் மார்க்கத்தில் புறவழிச்சாலை போடப்பட்டது.

இதற்காக, கோ.பொன்னேரி ஊராட்சி எல்லையிலும், சித்தலுார் நகராட்சி பகுதியிலும் ரவுண்டானா அமைக்கப்பட்டது.அதில், சித்தலுார் ரவுண்டானாவில், நகருக்குள் நுழையும் பகுதி தாழ்வாகவும், கருவேப்பிலங்குறிச்சி மார்க்க சாலை மேடாகவும் அமைந்தது. இதனால், ரவுண்டானா வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தடுமாறினர்.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் - ஸ்ரீமுஷ்ணம் சென்ற தனியார் பஸ் மீது மீன் லோடு ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி மோதியது.

இந்த கோர விபத்தில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.இதுபோல, சித்தலுார் ரவுண்டனாவில் பதினைந்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதமடைந்தன. இதுபோன்ற தொடர் விபத்துகளால், விருத்தாசலம் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விழி பிதுங்கினர்.ஓராண்டுக்குள், ஒரே இடத்தில் ஐந்து முறை சாலை விபத்துகள் நிகழ்ந்தால், அந்த பகுதி குறித்து 'மத்திய சாலை பாதுகாப்பு திட்டம்' மூலம் பராமரிக்கப்படும் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும்.

அதன்படி, சித்தலுார் ரவுண்டானா, கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எதிரில், கொல்லத்தங்குறிச்சி வெள்ளாறு மேம்பாலம், டி.வி.புத்துார் வெள்ளாறு மேம்பாலம், ராஜேந்திரபட்டிணம் பஸ் நிறுத்தம் ஆகிய ஐந்து பகுதிகளும் வெப்சைட்டில் பதிவேற்றி, 'பிளாக் லிஸ்டில்' இடம் பெற்றன.ரூ.2 கோடி ஒதுக்கீடுமுதற்கட்டமாக, சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், சித்தலுார் ரவுண்டானாவில், விபத்துகளை முற்றிலுமாக தடுத்து, உயிர்காக்கும் வகையில், திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்படி, சித்தலுார் ரவுண்டானாவை சீரமைக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச்சில் துவங்கிய இப்பணிகள், வரும் செப்டம்பரில் முடிவடைய உள்ளது.2 ஐலேண்ட், 4 சென்டர் மீடியன்ரவுண்டானா 32 மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், பெருநகரை போல மாறி விடும். அதில், நகருக்குள் நுழையும் பள்ளமான பகுதியை உயர்த்தி, கருவேப்பிலங்குறிச்சி மார்க்க சாலை உயரம் குறைக்கப்படுகிறது.ரவுண்டான நான்கு புறமும் சமப்படுத்தி, கடலுார், சேலம் மார்க்க வாகனங்கள் எளிதில் கடக்க 2 ஐலேண்ட் போடப்படுகிறது. நான்கு திசைகளிலும் சென்டர் மீடியன் போடப்பட உள்ளது.இப்பணியை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தனசேகர் தலைமையில், கோட்டப் பொறியாளர்கள் விழுப்புரம் சீனிவாசன், கடலுார் பரந்தாமன், விருத்தாசலம் உதவி கோட்டப் பொறியாளர்

அறிவுகளஞ்சியம், உதவி பொறியாளர்கள் விவேகானந்தன், சரவணன் ஆகியோர் பார்வையிட்டு, தீவிரம் காட்டி வருகின்றனர்.ரூ.4.65 கோடிக்கு டெண்டர்மத்திய அரசின் பிளாக் லிஸ்டில் உள்ள சித்தலுார் ரவுண்டானா 2 கோடி ரூபாயில் சீரமைக்கப்படுகிறது. அதுபோல், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எதிரில், கொல்லத்தங்குறிச்சி வெள்ளாறு மேம்பாலம் உள்ளிட்ட நான்கு இடங்களும் 4.65 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட உள்ளது.

இந்த வாரத்திற்குள் டெண்டர் முடிந்து, பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.விருத்தாசலம் சித்தலுார் ரவுண்டானா 2 கோடி ரூபாயிலும் மற்ற நான்கு இடங்களும் 4.65 கோடி ரூபாயிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X