சென்னை:'ஆட்டோக்களில் 5 கி.மீ., பயணிக்க, 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என, நுகர்வோர் அமைப்புகள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர்.
ஆட்டோக்களில் ஜி.பி.எஸ்., மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகள்,நேற்று முன்தினம் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். நேற்று, ஆட்டோ பயண நுகர்வோர் சங்க நிர்வாகிகளிடமும் கருத்து கேட்டனர்.
இது குறித்து, தமிழக நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பால் பர்ணபாஸ் கூறியதாவது:ஆட்டோக்களில் 5 கி.மீ., பயணிக்க, குறைந்தபட்ச கட்டணமாக30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை நிர்ணயிக்கலாம். இரவு 11:00 மணிக்கு மேல் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம்.
கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனையில் செலுத்தும் வசதி இருக்க வேண்டும்; ரசீது வழங்க வேண்டும்.டிஜிட்டல் மீட்டருடன், ஜி.பி.எஸ்., இணைக்கப்பட வேண்டும். அந்த ஆட்டோக்களை போலீசின், 'காவலன் செயலி' வாயிலாக கண்காணிக்க வேண்டும்.ஓட்டுனர், ஆட்டோ தொடர்புடைய ஆர்.டி. ஓ.,க்களின் விபரங்களை பயணியரின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
ஆட்டோ கட்டண விபரத்தை, பயணியர் அறியும் வகையில் அட்டையில் எழுதி தெரியப்படுத்த வேண்டும்.'அபே, ஓலா, ஊபர்' உள்ளிட்ட செயலி வழி ஆட்டோக்களுக்கும், கட்டுப்பாடுகளை நிர்ணயிக்க வேண்டும்.அடுத்த கூட்டத்தில் நுகர்வோர், ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர், போக்குவரத்து துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பினரும் இருக்க வேண்டும் என, போக்கு வரத்து துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.இவ்வாறு பால் பர்ணபாஸ் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE