ராமநாதபுரம் : ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசின் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுவதால் தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன் பதிவு செய்யலாம்.
விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாய விலை பொருட்களின் விலை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் செல்லும் போது அந்த விலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள்மூலம் கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.
தற்போது தேங்காய் கொப்பரை விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் குறைந்தபட்ச ஆதாரவிலையில் தேங்காய் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இம்மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, கீழக்கரை, ரெகுநாதபுரம், உச்சிப்புளி உள்ளிட்ட பல இடங்களில் 7300 எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்பு கூட்டி கொப்பரைகளாக விற்கின்றனர்.
சமீப காலமாக கொப்பரை விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க ஏதுவாக அவர்களிடமிருந்து கொப்பரை தேங்காய்கொள்முதல் செய்யப்படுகிறது.ராமநாதபுரத்தில் மதுரை ரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரில் உள்ள வேளாண் விற்பனை வாரிய ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 1000 டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.
மத்திய அரசால் 2022ல் அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையாக அரவை கொப்பரைக்கு கிலோ ரூ.105.90 வழங்கப்படுகிறது. ஜூலை மாதம் வரை இங்கு கொள்முதல் நடக்கவுள்ளதால் தென்னை விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE