புதுடில்லி:டில்லியில் நான்கு மாடி கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 27 பேர் உடல் கருகி பலியாகினர்; 40 பேர் படுகாயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு டில்லியில், முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நான்கு மாடியில் வணிக வளாகம் செயல்படுகிறது. இதில், வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நேற்று மாலை, இங்கு நுாற்றுக்கணக்கான மக்கள் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தனர்.மாலை 4:40 மணிக்கு இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் திடீரென தீப்பற்றியது; இது, மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியது.
இதையடுத்து, மக்கள் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடினர். ஆனால், கரும்புகை சூழ்ந்ததால், அவர்களால் உடனடியாக வெளியேற முடிய வில்லை. பலர் தீயில் கருகி உயிரிழந்தனர். டில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டன.ஆயினும், இந்த விபத்தில் 27 பேர் உடல் கருகி பலியாகினர்.
மேலும், 40 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர, 70க்கும் மேற்பட்டோர் எந்த காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் முதல் தளத்தில், கண்காணிப்பு கேமரா தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் தீப்பற்றியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
டில்லி சுகாதார அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கூறுகையில், ''நீண்ட போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் ஜன்னல் கம்பிகளை உடைத்து, பலரை மீட்டதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது,'' என்றார். இவ்வாறு அவர் கூறினார். தீ விபத்தில் பலியானோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும்' என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE