துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி கோவிலின், 66வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை இளைஞர் அணி, மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.,வுமான ராஜு துவக்கி வைத்தார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் மகனும், அக்கட்சியின் தலைமை நிலைய செயலருமான துரை, ஜோதியை பெற்றுக் கொண்டார். தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., அங்கம் வகிக்கிறது. தி.மு.க.,வில் நாயுடு சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் மூன்று பேர் மற்றும் சில எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ., ஒருவரைக் கூட அழைக்காமல், அ.தி.மு.க., 'மாஜி'யை அழைத்து விழாவை நடத்தியது, தி.மு.க.,வில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சட்டசபை தேர்தலில், ராஜு கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டதால், அவர் வெற்றி பெறுவதற்காக, அத்தொகுதியில் ம.தி.மு.க., போட்டியிடாமல், சாத்துார் தொகுதியில் போட்டியிட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், அந்த தொகுதியில், அ.தி.மு.க.,வுடன் ம.தி.மு.க., மறைமுக கூட்டணி வைத்ததாகவும் சர்ச்சை எழுந்தது. தற்போது, தொடர் ஜோதி ஓட்டம் விவகாரம் வாயிலாக, அ.தி.மு.க., பக்கம் ம.தி.மு.க., சாய்கிறதா என்ற சர்ச்சையும் கிளம்பி உள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE