உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலையில் வழித்தட அறிவிப்பு பலகை வைக்காததால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, திருச்சி, சேலம், மதுரை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப் பகுதியாக உள்ளது. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் உளுந்துார்பேட்டையை கடந்து செல்கின்றன.உளுந்துார்பேட்டையில் விருத்தாசலம் சாலையில் குறுக்கே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால், மேம்பாலத்தையொட்டி வாகனங்கள் செல்வதற்காக சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது.இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் விருத்தாசலம், நெய்வேலி செல்ல வேண்டுமானால் உளுந்துார்பேட்டை நகர் பகுதிக்குள் வந்து செல்லவேண்டிய நிலை இருந்து வந்தது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.விருத்தாசலம் சாலையில் மேம்பாலத்தையொட்டி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் மேம்பாலத்தையொட்டி சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. அவ்வழியாக வாகன போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.ஆனால் மேம்பாலத்தின் அருகே சர்வீஸ் சாலை எந்த பகுதிக்குச் செல்லலாம் என்பது குறித்து வாகன வாகன ஓட்டிகள் அறிந்து செல்வதற்கான வழித் தடங்கள் குறித்து அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை.இதனால் விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர் மற்றும் விருத்தாசலம் பகுதியிலிருந்து சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர்மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் எந்த வழியாக செல்லலாம் என்று அறிய முடியாத நிலை இருந்து வருகிறது. வழித்தட அறிவிப்பு பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, விருத்தாசலம் சாலையில் உள்ள சர்வீஸ் சாலை அருகேயும் மற்றும் மேம்பாலத்தில் தேசிய நெடுஞ்சாலையிலும் வழித்தட அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE