கோவை:''ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை; மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்குவிக்கிறது,'' என கவர்னர் ரவி பேசினார்.
கோவை பாரதியார் பல்கலை, 37வது பட்டமளிப்பு விழா நடந்தது. கவர்னர் ரவி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:புதிய கல்வி கொள்கையால், தமிழ் மொழியை பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கல்விக் கொள்கைதமிழ் சிறப்பான உயர்ந்த மொழி. மத்திய அரசு தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்த கல்விக் கொள்கை வழிவகை செய்கிறது.
ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை. மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்குவிக்கிறது. அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்ற வழக்காடுதல் நடக்க வேண்டும் என பிரதமர் மோடி, சமீபத்தில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் பேசி உள்ளார்.பனாரஸ் பல்கலையில், சமீபத்தில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிற நாடுகள், மாநிலங்களில் உள்ள பல்கலைகளில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதை போல, இந்தியாவில் உள்ள பிற பல்கலைகளிலும் இருக்கை அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கவலைப்பட வேண்டாம்
விழாவில் 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் சிவன் பேசியதாவது:தோல்வியை கண்டு, மாணவர்கள் அச்சம் கொள்ளக்கூடாது. எந்த இடத்தில் நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்களோ, அது குறித்து கவலைப்பட வேண்டாம். அதே இடத்தில் மீண்டும் சாதித்துக் காட்ட வேண்டும். முயற்சியை ஒரு போதும் கைவிடக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
பல்கலை துணைவேந்தர் காளிராஜ், உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன், பல்கலை பதிவாளர் முருகவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வணக்கம், வாழ்த்துகள்!
கவர்னர் ரவி தன் உரையின் துவக்கத்தில், தமிழில் 'அனைவருக்கும் வணக்கம்' என்றார். தொடர்ந்து, 'பட்டம் பெற்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். இதற்கு அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர்.
தொடர்ந்து தன் உரையில், 'எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்' என்ற திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறி, மாணவர்கள் தைரியமுடன் செயல்பட வேண்டும் என பேசினார்.
'ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை!'
பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஹிந்தி படிக்க விரும்புவோர், அதை படிக்கட்டும். ஹிந்தியை மாற்று மொழியாக வைத்துக் கொள்ளலாம்; கட்டாயம் ஆக்கக் கூடாது. தமிழகத்தில் தாய்மொழி தமிழ், சர்வதேச மொழி ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது.
ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கின்றனர். ஆனால், ஹிந்தி படித்தவர்கள் இங்கு 'பானி பூரி' தான் விற்கின்றனர்.நாங்கள் புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயாராக உள்ளோம். கவர்னர் எங்கள் உணர்வை புரிந்து, மத்திய அரசிடம் எங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும். தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.
நிருபர்களுக்கு ரூ.500 'லஞ்சம்
'நேற்றைய
பட்டமளிப்பு விழாவில், செய்தி சேகரிக்க சென்ற அனைத்து
பத்திரிகையாளர்களுக்கும் பல்கலை சார்பில் வழங்கப்படும் பத்திரிகை குறிப்பு
அடங்கிய பைலில், பல்கலை பெயரிலான பிரத்யேக கவரில் 500 ரூபாய் நோட்டு
இருந்தது. இதைப்பார்த்த பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
துணைவேந்தர்
காளிராஜிடம், பணம் கொடுத்தது கண்டிக்கத்தக்கது என முறையிட்டனர். அவர்
வருத்தம் தெரிவித்தார்.துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில்,
''பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்த விஷயம் எனக்கு தெரியாது. பணம்
கொடுத்தது யார் என விசாரிக்கப்படும். இது குறித்து உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE