சென்னை:ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று நடந்த உடற்கல்வி தேர்வில், ஆசிரியர்கள் விடைகளை சொல்ல, மாணவர்கள் எழுதினர்.
நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் நேற்று முன்தினம் முடிந்தன. இதில், உடற்கல்வி தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில், ஆறாம் வகுப்பு முதல் உடற்கல்வி மற்றும் ஓவியம் தொடர்பான ஆண்டு இறுதி தேர்வை நடத்துமாறு, நேற்று முன்தினம் இரவில், அனைத்து பள்ளிகளுக்கும், கல்வி துறை உத்தரவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளிகள், பாடமும் நடத்தாமல், புத்தகமும் வழங்காமல் தேர்வு மட்டும் எப்படி நடத்துவது என, குழப்பம் அடைந்தன. ஆனாலும், கட்டாயமாக தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டதால், வேறு வழியின்றி, நேற்று சில பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டது.
அப்போது, வினாத்தாள் வழங்கப்பட்டு, விடைகளை ஆசிரியர்களே வாய்மொழியாக சொல்லச் சொல்ல, மாணவர்கள் தேர்வு எழுதினர்.ஒன்பதாம் வகுப்பு வரையான பள்ளி பாடத்திட்டத்தில், உடற்கல்வி பாடமும் உண்டு. பாட புத்தகங்களும் உள்ளன; ஆனால், வழங்கப்படுவதில்லை. உடற்கல்வி பாடத்துக்கு என, தனியாக பாடம் நடத்தப்படுவதில்லை. உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளிகளின் அலுவலக பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.அதனால் தான், மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
வரும் ஆண்டிலாவது, உடற்கல்விக்கான பாட வேளை ஒதுக்கப்பட்டு, பாடப் புத்தகம் வழங்கிய பின், தேர்வு நடத்தப்பட வேண்டும் என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE