மதுரை:அ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்துார் ஊராட்சி ஒன்றிய தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசுக்கு தடை கோரிய வழக்கில், வருவாய் கோட்டாட்சியருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், பூச்சிக்காடைச் சேர்ந்த செல்வி தாக்கல் செய்த மனு:அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நான் திருச்செந்துார் ஊராட்சி ஒன்றிய தலைவியாக பதவி வகிக்கிறேன். ஒன்றியத்தில் ஐந்து வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க., - நான்கு; சுயேச்சை ஒரு வார்டில் வென்றனர்.அர்ப்பணிப்பு, நேர்மையுடன் கடமையை நிறைவேற்றுகிறேன்.
இதனால் எனக்கு எதிராக இடையூறு ஏற்படுத்த, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இரு கவுன்சிலர்கள், திருச்செந்துார் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.'விளக்கமளிக்க வேண்டும்; தவறினால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, எனக்கு கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதில், விதிகளை பின்பற்றவில்லை. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஐந்தில், மூன்று கவுன்சிலர்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. எனக்கு எதிரான நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளது.கோட்டாட்சியரின் நோட்டீசிற்கு இடைக்கால தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு செல்வி மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கோட்டாட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE