கோவை;மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில், 1,586 கிலோ தடைசெய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பெயரளவுக்கு 500, 1000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. அவற்றை செலுத்தி விட்டு, மீண்டும் விதிமீறலை தொடர்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.
கோவை மாநகராட்சியில் தினமும் டன் கணக்கில் சேகரமாகும் குப்பையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு தரும் 'பிளாஸ்டிக்' பொருட்களே அதிகம் தென்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகளும் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அவ்வப்போது ஆய்வு செய்து அபராத நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதாவது, ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் 'பிளாஸ்டிக்' சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல், பகிர்ந்தளித்தல் குற்றங்களுக்கு, முதன் முறை, 25 ஆயிரம் ரூபாய், இரண்டாவது முறை, 50 ஆயிரம், மூன்றாவது முறை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துதல், பகிர்ந்தளித்தல் குற்றங்களுக்கு, முதன் முறை 10 ஆயிரம், இரண்டாவது, 15 ஆயிரம், மூன்றாவது முறை, 25 ஆயிரம் ரூபாய் விதிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துதல், பகிர்ந்தளித்தல் குற்றங்களுக்கு, முதன் முறை, 1,000, இரண்டாவதாக, 2,000, மூன்றாவதாக, 5,000 ரூபாயும், சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு முதன் முறை, 100, இரண்டாவதாக, 200, மூன்றாவது முறை குற்றத்துக்கு, 500 ரூபாய் விதிக்க விதிமுறை உள்ளது. அபராத தொகை இவ்வளவு குறைவாக இருந்தும், இவற்றைக்கூட சரியாக வசூலிப்பது கிடையாது.
சிறு கடைகள், சிறு ஓட்டல்களை குறி வைத்து வாட்டி வதைக்கும் அதிகாரிகள், பெரிய நிறுவனங்களை கண்டுகொள்வதே கிடையாது.இந்நிலையில், மத்திய மண்டலம் ராஜவீதி, உக்கடம், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்கள், கிழக்கு மண்டலம் சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஒரே நாளில், 1,586 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களிடம், 14 ஆயிரத்து, 700 ரூபாயை மாநகராட்சி அதிகாரிகள் விதித்துள்ளனர்.
விதிமீறல் அளவோ பெரிது; அபராதமோ குறைவு. இவற்றில் கடைகள், பேக்கரிகளே அதிகம். இச்சூழலில், பெரிய நிறுவனங்கள், துணிக்கடைகள் என அனைத்திலும் அதிகாரிகள் அதிரடி தொடர வேண்டும். அபராதம் விஷயத்தில் கருணை காட்டாமல், பெரும் தொகையை அபராதமாக விதித்தால், விதிமீறல்கள் குறையும் என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE