பெ.நா.பாளையம்:'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம்' என, புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.சுற்றுப்புற சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில், நிரந்தர பசுமைச் சூழ்நிலையை உருவாக்கவும், 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம்' என்ற திட்டம் அனைத்து மாவட்டங்களிலும்,வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
73 லட்சம் மரக்கன்று இத்திட்டத்தில், முதற்கட்டமாக, 73 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி நடவு செய்து மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தேக்கு, ஈட்டி, மகாகனி, மருது, வேம்பு, மலைவேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை மற்றும் சந்தனம் உட்பட தரமான மரக்கன்றுகள் வனத்துறையிடம் உள்ளது. இவை, 32 அரசு நாற்றங்காலில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க தயாராக இருப்புவைக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்து, விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.ஏக்கருக்கு 160 மரக்கன்றுமரக்கன்றுகள் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு, 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு, 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக, இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை, மரக்கன்று ஒன்றுக்கு ஆண்டு தோறும், ரூ. ஏழு வீதம் மூன்று ஆண்டுகளுக்கு, ரூ.21 வழங்கப்படும்.டிச., மாதத்துக்குள் நடவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நடப்பட்ட மரக்கன்றுகள் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.மேம்பாட்டுபயிற்சி: இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் பாதிப்படையாமல், கூடுதலாக ஊடுபயிராக, மரங்களை வளர்த்து பலனடைவது தொடர்பாக அனைத்து விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.மரக்கன்று பெற்ற பயனாளிகள், மரக்கன்றுகள் வினியோகம் மற்றும் நடவு பணிகள் குறித்த தகவல்கள் அரசு இணையதள செயலியில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இத்திட்டத்தினால் வருங்காலங்களில், விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய மண் வளமும் அதிகரித்து, பசுமை பரப்பும், சுற்றுப்புற சூழலும் மேன்மை அடையும்.இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE