அன்னூர்:கோவை மாவட்டத்தில் அத்திக்கடவு திட்டத்தில், 110 குளங்களில் 'அவுட்லெட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' எனப்படும் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.பவானி ஆற்றில் உபரியாக சென்று, கடலில் வீணாகும் நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு -அவிநாசி திட்டம் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1756 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி நடக்கிறது. இதில் ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி., நீர் பெறப்பட உள்ளது.கோவை மாவட்டத்தில் அன்னூர், எஸ். எஸ்.குளம், சூலூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியங்களில், 258 குளங்களில், நீர் நிரப்பப்பட உள்ளது.இத்திட்டத்தில் பயன்பெறும் குளங்களில் செறிவூட்டப்பட வேண்டிய தண்ணீரின் அளவை கண்காணிக்க சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பேனல் பொருத்தப்பட்ட 'அவுட்லெட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' எனப்படும் உபகரணங்கள் பொருத்தும் பணி இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது.இதில் நேற்று முன்தினம் வரை, அன்னூர், எஸ்.எஸ்.குளம், காரமடை, சூலூர் ஒன்றியங்களில் 110 குளங்களில் இந்த நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை அத்திக்கடவு திட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.அன்னூர் அருகே முகாசிசெம்சம்பட்டி குளத்தில் இக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக குளத்திலிருந்து எவ்வளவு நீர் வெளியேற்றப்பட வேண்டும். செறிவூட்டப்பட வேண்டிய அளவு ஆகியவற்றை இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் வாயிலாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.கோவை மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் 110 குளங்களில் இந்த நவீன உபகரணம் பொருத்தப்பட்டது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.ஓரிரு மாதங்களில் இந்த குளங்களில் நீர் நிரப்பப்படும் என்பதால் விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE