மதுரை:'கபடி போட்டியில் பங்கேற்போர் மற்றும் பார்வையாளர்கள், எந்தவொரு கட்சி, ஜாதி அல்லது மதத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கோஷம் எழுப்பக்கூடாது' என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை பின்பற்ற, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருகே புளியங்குளம் விஷ்ணு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'புளியங்குளத்தில் வரும் 21, 22ல் கபடி போட்டி நடத்த அனுமதி கோரி போலீசில் மனு அளித்தோம். அனுமதி வழங்கவும், போலீசார் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், 'போட்டி யின் போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது' என்றார்.எனினும், கபடி போட்டி நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி, கீழ்கண்ட நிபந்தனைகளை பின்பற்ற உத்தரவிட்டார். போட்டி, 21 மற்றும் 22 காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே நடத்த வேண்டு
* போட்டியில் பங்கேற்போர் மற்றும் பார்வையாளர்கள் எந்தவொரு கட்சி, ஜாதி அல்லது மதத்திற்கு ஆதர வாகவோ அல்லது எதிராகவோ கோஷம் எழுப்பக்கூடாது
* ஒன்று அல்லது இரண்டு டாக்டர்கள் மூலம் முதலுதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
* பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது எந்த ஒரு சமூக, அரசியல் தலைவரின் படம் அல்லது வாசகங்களுடன் ஆடை அணியக்கூடாது. சமூக தலைவரை புகழ்ந்து பாடும் பாடல்களை இசைக்கக் கூடாது
* கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்போர் போட்டியில் பங்கேற்க தகுதி இல்லை
*போட்டியின் போது எவ்வித நச்சுப் பொருள் அல்லது மதுபானத்தை யாரும் உட்கொள்ளக் கூடாது
* ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு நடந்தால், கிராம மக்கள், போட்டியை நடத்துவோர் பொறுப்பேற்க வேண்டும்
*பார்வையாளர்கள் 'மாஸ்க்' எனப்படும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE