அன்னூர்:தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில், மூன்று ஊராட்சிகளில், விவசாயிகளின் தோட்டங்களில் ஆறு போர்வெல்கள் இலவசமாக போடப்படுகின்றன.தமிழக அரசு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் தரிசாக உள்ள குறைந்தது 25 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களின் தொகுப்பு தேர்வு செய்யப்படுகிறது. அந்த தரிசு நிலங்களில் இலவசமாக போர்வெல்கள் போடப்பட்டு, பண்ணை குட்டை அமைக்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் இலவசமாக அமைத்து தரப்படுகிறது. மானியத்தில் இடுபொருள், உரம் வழங்கப்படுகிறது.இதன்மூலம் தரிசு நிலம் விவசாய நிலமாக மாறும். அன்னூர் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகள் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ஆம்போதி, வடவள்ளி அக்கரை செங்கப்பள்ளி ஆகிய மூன்று ஊராட்சிகளில், தலா இரண்டு போர்வெல்கள் போட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அங்கு போர்வெல் போடுவதற்கு தண்ணீர் ஊற்று உள்ள பகுதியை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது, உதவி புவியியலார் நந்தகுமார் மூன்று ஊராட்சிகளில் ஆறு இடங்களில் தண்ணீர் ஊற்று பகுதியை கண்டறிந்து குறியீடு செய்தார்.இப்பணியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா, உதவி தோட்டக்கலை அலுவலர் ரவிக்குமார், துணை வேளாண் அலுவலர் முருகன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.தங்களது சொந்த தோட்டத்தில் அரசு இலவசமாக போர்வெல் அமைத்து கொடுப்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE