கோவை;தமிழகம் முழுவதும் முதலீட்டாளர்களிடம், 400 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி, கார், பைக் மற்றும் ஐரோப்பிய சுற்றுலா ஆசை காட்டி ஏமாற்றியது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கோவை சுந்தராபுரம் குறிஞ்சி கார்டனில் வசித்தவர் விமல் குமார். அவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும், காளப்பட்டியில் கரன்சி வர்த்தகம் செய்யும் 'ஆல்பா பாரெக்ஸ் மார்க்கெட்ஸ்' என்ற நிறுவனம் மற்றும் 'மிஸ்டர் மணி' என்ற யூடியூப் சேனல் நடத்தினர்.தமிழகம் முழுவதும் இருந்து 8,000 பேர் இவர்களது நிறுவனத்தின் பணம் முதலீடு செய்துள்ளனர். மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு, விமல் குமார் தம்பதி தலைமறைவாகி விட்டனர். குறைந்தபட்சம் 400 கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். முதல் கட்டமாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முருகன் புகார்படி, 16 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் வரும் ஒவ்வொரு புகார்தாரரையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நிதி முதலீடு செய்பவர்களுக்கு ஏராளமான ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் மூலம் இரண்டரை கோடி ரூபாய் டிபாசிட் சேர்த்தால், குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம். ஐந்து கோடி ரூபாய்க்கு டிபாசிட் சேர்த்தால் இரு சக்கர வாகனம், ஏழரை கோடி ரூபாய்க்கு டிபாசிட் சேர்த்து கொடுத்தால், கார் அன்பளிப்பாக தரப்படும் என்றும் விமல்குமார் கூறியுள்ளார். அதை நம்பி டிபாசிட் வசூலித்துக் கொடுத்தவர்கள், இப்போது வழக்கில் சிக்கியுள்ளனர்.
மோசடி செய்த விமல் குமார், ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் ஏஜன்ட்களை நியமித்துள்ளார். அவர்களுக்கு, 'இன்வெஸ்ட்மென்ட் புரோக்கர்' என்று பெயரும் சூட்டி, முதலீடு வசூலிப்பதற்கு அதிகாரமும் கொடுத்துள்ளார். அப்படி வசூலித்து தரப்பட்ட மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு அவர் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக இருக்கும் விமல் குமார், அவரது யூடியூப் சேனலில் தொடர்ந்து கரன்சி வர்த்தகம் தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்க, அந்த யூடியூப் சேனலை முடக்க கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பாஸ்போர்ட்டை முடக்கவும் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE