திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறையினரின் இரண்டு நாள் போராட்டத்தால், 360 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை இல்லாத வகையில், ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது. தமிழக நுாற்பாலைகள், அனைத்து ரக நுால் விலையை, 18 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்; பருத்தியை யூக வணிகத்திலிருந்து நீக்கி, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 16, 17 ஆகிய தேதிகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உள்பட 36 சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.இதனால், இரண்டு நாட்கள் முழுமையாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை முடங்குகிறது. ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்துகின்றன. இப்போராட்டத்தால், மொத்தம் 360 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE