சென்னை, மே 14-அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ள உயர் நீதிமன்றம், மத்திய கூட்டுறவு சங்கங்களின் இணைச் செயலர் மற்றும் ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆஜராக, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ரெப்கோ வங்கியின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி, தனபால் என்பவர் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் விசாரித்தது.மனுவை பரிசீலிக்க, மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, இயக்குனர்கள் குழு நியமனம் தொடர்பான சட்ட விதிகள், மத்திய கூட்டுறவு சங்க சட்டத்துக்கு முரணாக இருப்பதால், உரிய திருத்தம் மேற்கொள்ள, ரெப்கோ வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தாமல், இயக்குனர்கள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும், உரிய திருத்தம் மேற்கொண்ட பின், இயக்குனர்கள் குழு தேர்தலை நடத்தவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் தனபால் வழக்கு தொடர்ந்தார். பின், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது. திருத்திய விதிகளின்படி, இயக்குனர்கள் குழு தேர்தல் முடிக்கப்படும் என உத்தரவாதமும் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து, அவமதிப்பு வழக்கை, உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.இந்நிலையில், முக்கிய ஆவணங்களை மறைத்திருப்பதாகவும், அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி, தனபால் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்வதை கண்காணிக்கும் பொறுப்பு, மத்திய கூட்டுறவு சங்கங்களின் இணைச் செயலருக்கு உள்ளது. அவர் கடமை தவறி விட்டார். நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்கான ஆரம்ப முகாந்திரம் உள்ளது.
எனவே, அவமதிப்பு வழக்கு, மீண்டும் விசாரிக்கப்படும். மத்திய கூட்டுறவு சங்கங்களின் இணைச் செயலர் விவேக் அகர்வால் மற்றும் ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனர் இசபெல்லா ஆகியோர் ஆஜராக, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது. விசாரணை, ஜூன் 17க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE