துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ஒரே நாளில் 2500 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமங்களில் இருந்த 2500 ஏக்கர் நிலத்திற்கு ஏப்ரல் 18ல் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் பத்திரம் பதிவு செய்யப்பட்டது.கோயம்புத்தூர், கணபதியில் உள்ள ஆதிதேவ் கிரீன் டெக் அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ள அன்புராஜ் கிஷோருக்கு, திருநெல்வேலியை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் பவர் கொடுத்தார்.கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த தகவல் தெரியவந்ததும் அவர்கள் பா.ஜ.,வை சார்ந்த முன்னாள் எம்.பி., சசிகலாபுஷ்பா தலைமையில் பத்திரபதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து மாவட்ட பதிவாளர் பால்பாண்டி விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதன்பேரில் சார்பதிவாளர் மோகன்தாசை நேற்று சஸ்பெண்ட் செய்து திருநெல்வேலி பத்திரபதிவு ஏ.ஐ.ஜி. கவிதாராணி உத்தரவிட்டார்.விவசாயிகள் புகார்விவசாயிகள் கூறியது:துாத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கயத்தாறு, புதுக்கோட்டை பகுதிகளில் காற்றாலை நிறுவனங்கள் நிறைய நிலம் வாங்குகின்றன. இங்குள்ள பல நிலங்கள் உரிமையாளர்களுக்கே தெரியாமல் முதலில் பவர் பத்திரம் செய்யப்படுகின்றன. அதில் எதிர்ப்பு எழாத பட்சத்தில் விற்பனை நடக்கிறது. அடுத்தடுத்து மூன்று நான்கு பேருக்கு விற்றபின் வட மாநிலங்களை சேர்ந்த காற்றாலை நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுவிடுகிறது.இந்த போலி பத்திரபதிவுகளுக்கு அதிகாரிகளும் துணை போகின்றனர். தற்போது விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் தான் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று நடந்துள்ள பத்திரபதிவுகள் குறித்து ஆய்வு செய்தால் பல கோடி ரூபாய் முறைகேடுகளை கண்டுபிடிக்கலாம்.ஏப்ரல் 18ல் நடந்த இந்த முறைகேடான பத்திர பதிவிற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காத திருநெல்வேலி பதிவுத்துறை உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
துாத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று நடக்கும் நிலஅபகரிப்புகளில் புகார் கொடுத்தபின் நிலத்தை மீட்டதாக போலீசார் அறிவிக்கின்றனர். புகார் கொடுத்த விவசாயிகள் வசம் நிலமும் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் மீதியுள்ள நிலங்கள் முறைகேடு செய்தவர் வசமே உள்ளன. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதுவே முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதற்கு காரணமாகிவிடுகிறது.இவ்வாறு கூறினர்.
வடக்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த தங்கதுரை கூறியது: தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த சிலர் தங்கள் இடத்தை விற்க வில்லங்க சான்றிதழ் பெற்ற போது தான் இந்த பவர் பதிவு தெரிய வந்தது. இது குறித்து கேட்டபோது சார்பதிவாளர் சரிவர பதிலளிக்கவில்லை. இதையடுத்து பா.ஜ.,வினருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் போராட்டம் நடத்தியதால் தீர்வு கிடைத்துள்ளது. தற்போது பவர் பத்திரம் ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் வில்லங்க சான்றிழில் அந்த பதிவு, ரத்து என அனைத்தும் நிரந்தரமாக இடம் பெறும்.
இது சொத்தில் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும்.சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று தளவாய்புரத்தில் 600 ஏக்கரை குறிப்பிட்ட நபருக்கு விற்றுள்ளனர். அவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் வி.ஏ.ஓ.,விற்கு வரும்போது தான் இட உரிமையாளர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE