சென்னை:சேலம் மாவட்டத்தில், கோவில் அர்ச்சகரை 'சஸ்பெண்ட்' செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அறநிலையத் துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்ப்பு
சேலம், அம்மாப்பேட்டை கிருஷ்ணா நகரில், சீதா ராமச்சந்திரமூர்த்தி கோவில் உள்ளது. இங்கு அர்ச்சகராக பணியாற்றிய கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:கடந்த மூன்று ஆண்டுகளாக, எனக்கு சம்பளம் தரப்படவில்லை. கோவிலுக்கு நிர்வாக அதிகாரி யாரும் நியமிக்கப்படவில்லை. குறிப்பிட்ட எந்த உத்தரவும் இன்றி, கோவில் நிர்வாகத்தை, தக்கார் மேற்கொள்கிறார்.
சேலம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலராக மஞ்சுளா ராஜ்மோகன் உள்ளார். இவர், தி.மு.க.,வைச் சேர்ந்தவர். 2022 ஏப்ரல் 18ம் தேதி, காலை 10:00 மணிக்கு, 'நைட்டி' உடையுடன் கோவிலுக்கு வந்தார். பாரம்பரிய உடையில் மட்டுமே கோவிலுக்குள் வர வேண்டும் என, நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.இதனால் ஆத்திரமடைந்த அவர், என்னை திட்டினார்; அச்சுறுத்தினார். தொடர்ந்து எனக்கு அச்சுறுத்தல் வரவே, நான் மன உளைச்சல் அடைந்தேன்.
இதுகுறித்து, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டேன்.கடந்த ஏப்ரல் 27ம் தேதி மாலையில், கவுன்சிலரின் ஆதரவாளர்கள் 60 பேர் கோவிலுக்குள் வந்தனர். ஒருவர் என்னை தாக்கினார். குற்றச்சாட்டுகோவில் தக்கார் புனிதராஜ், இதை பார்த்து அமைதியாக இருந்தார். கோவில் சாவியை என்னிடம் இருந்து பறித்து, அவர்களுடன் வந்திருந்த மற்றொரு அர்ச்சகரிடம் கொடுத்தனர்.
இதையடுத்து, என்னை சஸ்பெண்ட் செய்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் பெயரில், கோவில் தக்கார் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை பிறப்பிக்க, உதவி ஆணையர் மற்றும் தக்காருக்கு அதிகாரம் இல்லை.நள்ளிரவில் கோவிலை திறந்ததாகவும், ஜாதி பாகுபாடு பார்ப்பதாகவும், பெண்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை எனவும், எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. நேரம், தேதி, இடம் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் குற்றப்பத்திரிகையில் இல்லை. உள்நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, சஸ்பெண்ட் உத்தரவு, குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்; விசாரணை முடியும் வரை, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அறநிலையத் துறைக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.
கோவில் தக்கார் மற்றும் கவுன்சிலர் மஞ்சுளா உள்ளிட்டோருக்கு தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவும், நீதிபதி அனுமதி அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE