புதுச்சேரி,-'ஏ.எப்.டி., உள்ளிட்ட மூன்று மில்களையும் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில தி.மு.க., அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவரது அறிக்கை:ஏ.எப்.டி., சுதேசி மற்றும் பாரதி மில்களை, வரும் 30ம் தேதியுடன் மூடுவதற்கு நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. ஒரு காலத்தில் அரசும், தனியாரும் வேலைவாய்ப்புகளை அளித்தன. ஆனால், தற்போது, இரண்டுமே கையை விரித்து விட்டன.மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்துகின்ற ஆட்சியாளர்கள் தங்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த மக்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டாமா. ஆட்சியில் அமர்ந்து ஒரு ஆண்டை கடந்த நிலையில், கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் சிறந்த ஆட்சியைத் தருவேன் என்று கூறிய பிரதமர் மோடி ஆகியோர் மில்களை இயங்க செய்யாமல் அமைதியாய் இருப்பதும், மில்கள் மூடப்படுகின்ற நடவடிக்கையை அங்கீகரிப்பதும் எந்த வகையில் நியாயம்?மூன்று மில்களும் முழுமையாக இயங்குவதன் மூலமாக புதுச்சேரி மாநிலத்தின் ஐந்தில் ஒரு பகுதி குடும்பங்கள் நிம்மதியாக வாழும். மில்களை திறக்கக் கோரி எதிர்கட்சித் தலைவர் சிவா சட்டசபையில் பல முறை கோரிக்கை வைத்தார். ஆனால், இதுநாள் வரை எந்த பதிலும் இல்லை. எனவே, கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மத்திய அரசை அணுகி உரிய நிதி பெற்று மூன்று மில்களையும் இயங்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE