புதுச்சேரி,- 'புதுச்சேரி கம்பன் கழக விழா மேடை, ஏறியவர்களை ஏற்றி விடுகின்ற மேடை' என, உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.புதுச்சேரியில் கம்பன் விழாவை தலைமை தாங்கி துவக்கி வைத்துஅவர் பேசியதாவது:புதுச்சேரி கம்பன் கழகத்திற்கு ஒரு சிறப்புண்டு. அரசியல் பாகுபாடின்றி, யார் முதல்வராக இருந்தாலும் அவரே சங்கத்தின் புரவலராக இருப்பது, தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.இந்த மேடை, இங்கு ஏறியவர்களை ஏற்றி விடுகின்ற மேடை. இதை மேடையில் உள்ள (கவர்னரை பார்த்து) ஒருவருக்கு கூறிக் கொள்கிறேன். அது, புரிந்தவர்களுக்கு புரியட்டும்; புரியாதவர்களுக்கு புரியாமல் போகட்டும். இதற்கு நானே சாட்சி. கடந்த 1983ல் நான் வழக்கறிஞராக இருந்தபோது, பேச்சாளராக இந்த மேடையில் ஏறினேன். அதன்பிறகு, 2007ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இங்கு வந்து பேசியுள்ளேன். பின், ஒருங்கிணைந்த ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்து இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்துள்ளேன். இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக மேடையில் நிற்கிறேன்.சுமார் 38 ஆண்டுகள் இந்த கழகத்தோடு நானும் நடந்து கொண்டிருக்கிறேன். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளை தவிர்த்து, மற்ற எல்லா காலங்களிலும் மூன்று நாட்கள் முழுமையாக கூட்டத்தோடு நடைபெறுகிற ஒரே கம்பன் விழா இதுமட்டும்தான்.புதுச்சேரி மக்கள் கம்பனையோ, கம்பன் கழகத்தையோ கைவிடவில்லை. அதற்கு சாட்சியாக தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த கவிஞரையாவது, எந்த நாடாவது, எப்போதாவது கொண்டாடி இருக்கிறதா என்று பார்த்தால் வரலாற்றில் சான்றில்லை. ஆனால், கம்ப ராமாயணம் படிப்பவர்கள் மனதையெல்லாம் ஆயிரம் ஆண்டுகளாக கொள்ளை கொண்டு போவதால்தான், இன்றைக்கும் தொடர்ந்து கம்பனை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இவ்வாறு, நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE