வில்லியனுார்- வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நாளை மாலை ஆன்மிக நடைபயணம் நடக்கிறது.வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை சுற்றிலும் பிரசித்திப்பெற்ற 6 சிவாலயங்களும், 18 சித்தர்களின் ஜீவ சமாதிகளும் அமைந்துள்ளன.திருவண்ணாமலையில் நடக்கும் கிரிவலம் போல, கடந்த மார்ச் மாத பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து முதன்முறையாக ஆன்மிக நடைபயணம் துவங்கியது. நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜப் பெருமாள் ஆகிய கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரர் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற விநாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சித்தர் பீடம், வி.மணவெளி - ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில் தரிசனம் முடிந்து கோட்டைமேடு வழியாக ஆன்மிக நடைபயணம் திருக்காமீஸ்வரர் கோவிலை மீண்டும் வந்தடைந்தது. இந்நிலையில், கடந்த மாதம் சித்ரா பவுர்ணமியன்று திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் துவங்கிய இரண்டாவது ஆன்மிக நடைபயணத்தில் காலாப்பட்டு, அரியாங்குப்பம், சேதராப்பட்டு, திருக்கனுார், கரிக்கலாம்பாக்கம், அரியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நாளை மாலை நடக்க உள்ள பவுர்ணமி தின ஆன்மிக நடைபயணத்தில், திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல முடியாத புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், வில்லியனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்களும் அதிக அளவில் ஆன்மிக நடைபயணத்தில் பங்கேற்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE