வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர் : ''வழக்கமாக பருவ காலங்களில் வரும் காய்ச்சலுக்கு, புதிய பெயர் யாராவது வைத்தால், மக்களுக்கு பயம் வந்து விடுகிறது. தக்காளி காய்ச்சல் குறித்து அச்சம் வேண்டாம்,'' என, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணியை பார்வையிட்ட, அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு, 11.06 கோடி தடுப்பூசி தருவிக்கப்பட்டுள்ளது. இன்னமும், 45 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். காலக்கெடு வந்தும், 1.29 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
கேரளா, கொல்லத்தில் கண்டறியப்பட்ட ஒரு வித வைரஸ் காய்ச்சலுக்கு பேச்சு வழக்கில், 'தக்காளி காய்ச்சல்' என பெயர் வைத்துள்ளனர். அம்மாநில சுகாதார செயலாளர் மற்றும் அலுவலர்களிடம் பேசினேன்; பயப்பட தேவையில்லை. இக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளனர்.
ஒரு வைரஸ்க்கு பெயர் சூட்டினால், அதை கேட்கும் மக்களுக்கு பயம் வந்து விடுகிறது. அச்சம் வேண்டாம். நோய் தடுப்பு வல்லுனர்கள் கருத்து கேட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரு வாரங்களில், 3,000 'ஷவர்மா' கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கெட்டு போன, காலாவதியான இறைச்சி உணவுகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

பாடம் நடத்திய செயலர்
திருப்பூர் மருத்துவ கல்லுாரி வகுப்புக்கு சென்ற ராதாகிருஷ்ணன்,''ஒரு நோய்க்கு நம்மிடம் (டாக்டர்கள்) இருந்து நோயாளிகள் தீர்வு கேட்கின்றனர். உங்களின் ஒரு கண் தாய், சேய் நலத்துக்கும், மற்றொரு கண் நோய்தடுப்புக்கும் பணியாற்ற வேண்டும். வருங்கால மருத்துவ தலைமுறையான நீங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். கடமை, சேவை இரண்டும் இணைந்தது மருத்துவமனை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE