மும்பை: மஹாராஷ்டிராவில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு தற்காலிக ஜாமின் அளிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக தேசியவாத காங். கட்சியின் நவாப் மாலிக் உள்ளார். இவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளிடம் இருந்து நிலம் வாங்கியதில் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் பிப்ரவரி 23ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் உள்ள அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்னையால் கடந்த மாதம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். தனக்கு உள்ள சிறுநீரக பிரச்னையை சுட்டிக்காட்டி ஆறு வாரத்திற்கு தற்காலிக ஜாமின் வழங்க மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நவாப் மாலிக் முறையிட்டார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ரோக்கடே முன் நேற்று நடந்தது.அப்போது நவாப் மாலிக்கிற்கு தற்காலிக ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. சிகிச்சையின்போது மாலிக்குடன் அவரது மகள் உடனிருக்கவும் அனுமதி வழங்கியது. அப்போது மாலிக்கிற்கு துவக்கத்தில் இருந்து சிகிச்சை அளித்து வந்த டாக்டரிடம் அவரை அழைத்துச் செல்லாததற்கு அமலாக்கத் துறையை நீதிமன்றம் கண்டித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE