கோவை: மோசடி வழக்கில், தம்பதி மற்றும் வங்கி மேலாளருக்கு, தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கோவை சி.பி.ஐ., கோர்ட்டில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள லட்டுவாடியைச் சேர்ந்தவர் சக்திவேல், 48.இவரது மனைவி விஜயகுமாரி, 42. இவர்கள், 'சன் பயோ' என்ற பெயரில், மண் புழு உரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தனர். சென்னை, சாலிகிராமத்தில் புதிய கிளைக்கு 'செட்' அமைக்க, வீரபாண்டி, இந்தியன் வங்கி கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம், சக்திவேல், விஜயகுமாரி ஆகியோர் கடன் கேட்டு விண்ணப்பித்தனர். இதையடுத்து, அவர்களது நிறுவனத்துக்கு 2009ல், 1.85 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
வங்கி உயர் அதிகாரிகள் தணிக்கையில், சக்திவேல், விஜயகுமாரி ஆகியோர், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததும், வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. கொடுங்கையூர், ஆரோக்கியசாமி என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து உள்ளார். சென்னை சி.பி.ஐ.,யில், 2010, ஜன., 21ல் அளிக்கப்பட்ட புகாரின்படி, நான்கு பேர் மீதும் மோசடி வழக்கு பதியப்பட்டது.
கோவை சி.பி.ஐ., கோர்ட்டில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல், விஜயகுமாரி, வங்கி மேலாளர் பாலசுப்பிரமணி ஆகியோருக்கு, மூன்றாண்டு சிறை, 6.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார்.விசாரணைக்கு ஆரோக்கியசாமி தொடர்ந்து ஆஜராக தவறியதால், அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement