விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து, சந்தேகத்தின்பேரில், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், மணலுார் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 55; நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்து கொண்டிருந்த போது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. கிருஷ்ணமூர்த்தி கதவை திறந்து பார்த்தபோது, வடமாநில வாலிபர்கள் நான்கு பேர் வெளியில் நின்றிருந்தனர்.அதிர்ச்சியடைந்த அவர், அவர்களிடம் பேச்சு கொடுத்தார். இந்தியில் பேசியதால் கிருஷ்ணமூர்த்திக்கு புரியவில்லை. அவர்களை அருகில் வருமாறு அழைத்த போது தப்பியோட முயன்றனர். கிருஷ்ணமூர்த்தி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ஒருவரை மடக்கினர். மற்றவர்கள் தப்பியோடினர்.
சிக்கியவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து, விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வாலிபரிடம் விசாரித்தனர். அவர்கள் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 15 நாட்களுக்கு முன் திருவாரூர் பகுதியில் உள்ள தனியார் கடைக்கு வேலைக்கு வந்துள்ளனர்.அங்கு வேலை, சாப்பாடு பிடிக்காததால், பீஹார் திரும்பி செல்ல வேண்டும் என, திருவாரூரில் இருந்து விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் வந்துள்ளனர். மழை பெய்ததால், கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஒதுங்கியது தெரிய வந்தது. தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE