இடைப்பருவ மா சாகுபடியால், சீசனில் மா உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இடைப்பருவ மா சாகுபடிக்கு தடை விதிக்க வேண்டும். இடைப்பருவ மா உற்பத்தியால் சீசன் காலங்களில் மாங்கூழ் தயாரிப்பு தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 45 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா மற்றும் அல்போன்சா ரகத்தில் இருந்து மாங்கூழ் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 5 ஆண்டுகளாக, அதிக விலை கிடைப்பதால், இடைப்பருவ மா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், சீசனில் மா உற்பத்தி வெகுவாக குறைந்து வருவதால், இந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, மாங்கூழ் அரவை துவங்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இடைப்பருவ மா சாகுபடியை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட, மாங்கூழ் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பையூர் மாதவன் கூறியதாவது:
மாவட்டத்தில் ஆண்டிற்கு, 4.5 லட்சம் டன் மாங்காய்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம், 2 லட்சம் டன் மாங்கூழ் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அன்னிய செலவாணியாக கோடிக் கணக்கில் வருவாய் கிடைக்கிறது.
மாவை வாழ்வாதாரமாகக் கொண்டு, 40 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளும், மாங்கூழ் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும், 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.
சீசனில் சாகுபடி செய்யும் மாங்காய் விலையைவிட, இடைப்பருவத்தில் சாகுபடி செய்யும் மாங்காய்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இதனால் கடந்த, 5 ஆண்டுகளாக சீசனில் மா விளைச்சல் படிப்படியாக குறைந்து வருவதால், மாங்கூழ் தயாரிக்கும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் மா சாகுபடி குறைந்து வருவதால், 50 ஆயிரம் டன் மாங்காய் கூட அரவைக்கு கிடைக்குமா
என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து மா இறக்குமதி செய்து, 21 தொழிற்சாலைகளில் மாங்கூழ் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
சீசன் காலத்தில் மா விளைச்சல் பாதிக்கப்படுவதற்கு, முக்கிய காரணமாக இடைப்பருவ மா சாகுபடி உள்ளது.
சீசனில் சாகுபடி செய்யும் மாங்காய்க்கு, 3 முறை மட்டுமே மருந்து அடிக்கும் விவசாயிகள், இடைப்பருவ மா சாகுபடிக்கு வீரியமான மருந்தை, 30 முறை
அடிப்பதால், 10 கி.மீ., சுற்றளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சீசன் காலங்களில் பூச்சி தாக்குதல் அதிகரித்து, விளைச்சலும், மாங்கூழ் உற்பத்தியும் பாதிக்கப்படுவதால், விவசாயிகள், மாங்கூழ் உற்பத்தியாளர்கள் வெகுவாக பாதிக்கின்றனர்.
எனவே இடைப்பருவ மா விளைச்சலை விவசாயிகள் கைவிட வேண்டும். அரசும் தடை செய்ய வேண்டும். இந்த ஆண்டு மா விளைச்சல் பாதிப்பால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மா சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள், 3 மாதம் மட்டுமே செயல்படும் நிலையில், 12 மாதமும்
மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, 3 மாதங்களுக்கு மட்டுமே மின்கட்டணம் வசூலிக்க வேண்டும். மேலும், வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். மாங்கூழுக்கு, 12 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிப்பதை முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். மா விவசாயத்தை காக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முன்வர வேண்டும். இல்லையென்றால், மா நகரம் என்ற அந்தஸ்தை கிருஷ்ணகிரி மாவட்டம் இழக்கும் அபாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE