'பல வழிகளில் ஏமாற்றி பண மோசடி செய்யும் வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் கடந்த, 2021 ஏப்., முதல் கடந்த ஏப்., மாதம் வரை, 962 பண மோசடி புகார்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்., முதல் டிச., வரை, 598 வழக்குகளும், கடந்த ஜன., வரை ஏப்., வரை, 36-4 புகார்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டை விட நடப்பாண்டில் புகார்கள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டில் பெறப்பட்ட, 598 மனுக்களில், 541 மனுக்கள், தேசிய சைபர் கிரைம் அறிக்கை இணையதளம் (என்.சி.ஆர்.பி.,) மூலமாகவும், 57 மனுக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 2.49 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜன., முதல் நான்கு மாதங்களில், பெறப்பட்ட 364 புகார்களில், 338 என்.சி.ஆர்.பி., மூலமாகவும், 26 மனுக்கள் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் அலுவலகத்திலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 2.24 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு புகார்களில், 4.73 கோடி ரூபாயை பொதுமக்கள் இழந்துள்ளனர். அவற்றில், 15.41 லட்ச ரூபாய் திரும்ப பெறப்பட்டும், 23.79 லட்ச ரூபாய் முடக்கப்பட்டும்
உள்ளது.
பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். குறைந்த முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிப்பது, பரிசு கொடுப்பது, திருமண ஆசை காட்டுவது, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம், வீடியோ அனுப்பி அவர்களை மிரட்டுவது போன்றவற்றின் மூலம் பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு மோகம், விரைவில் பணம் சம்பாதிப்பது ஆகியவையே பொதுமக்கள் பணத்தை ஏமாறுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.
குறிப்பாக பெண்களுடன் நட்பாக பழகி வெளிநாட்டிற்கு வரவழைப்பதாகவும் அதற்கு வரி கட்ட வேண்டுமென அவர்களை தூண்டி பணம் பறித்து வருகின்றனர். இதுபோல் மாவட்டத்தில், 1 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
இதேபோல் பாதிக்கப்பட்டவர்கள், மோசடி கும்பல் அனுப்பும் ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவு செய்து ஏமாந்துள்ளனர். பணத்தை இரட்டிப்பாகும் ஆசையில் தொழிலதிபர்களும் ஏமாந்து வருகின்றனர். அதில், முதல்முறை முதலீடு செய்யும் போது, சிறிய தொகையை வட்டியுடன் திரும்ப அனுப்பி அவர்களை நம்ப வைத்து பெரும் தொகையை மோசடி செய்கின்றனர்.
எனவே மொபைலில் நம்பத்தகாத செயலிகளை டவுன்லோடு செய்ய கூடாது. மொபைலில் தங்களது சுய விவரங்களை பகிரும் போது கவனமுடன் செயல்பட வேண்டும். சைபர் கிரைம் புகார்களை பதிவு செய்ய 1930 என்ற எண்ணிலோ, www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரையோ அணுக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE