சலவை தொழிலாளி
லாரி மோதியதில் பலி
மொடக்குறிச்சி: நஞ்சை ஊத்துக்குளி, எம்,ஜி,ஆர்., நகரை சேர்ந்தவர் சங்கரப்பன் 80; மகன் நடத்தும் சலவை செய்யும் கடைக்கு, சுற்று வட்டார பகுதியில் சென்று துணிகளை வாங்கி வருவார். வழக்கம்போல் நேற்று துணி வாங்க மொபட்டில் சங்கரப்பன் சென்றார். மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரியின் பின்பக்க ஆங்கிள், மொபட்டில் உரசியதில் நிலைதடுமாறி விழுந்தார். படுகாயமடைந்த சங்கரப்பனை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று மாலை இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
பிரேக் பிடிக்காததால்
கண்டெய்னர் பல்டி
சத்தியமங்கலம்: கோவையிலிருந்து மைசூருக்கு சரக்கு ஏற்றிய கண்டெய்னர் லாரி, திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று காலை சென்றது. அன்னுாரை சேர்ந்த
சரவணன் ஓட்டினார். காலை, 8:30 மணியளவில் ஆசனுார் அருகே செம்மண் திட்டு என்ற இடத்தில், பிரேக் பிடிக்காமல் லாரி சாய்ந்து விட்டது. டிரைவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காலை, 9:40 மணிக்கு கிரேன் மூலம் லாரியை மீட்ட பிறகே, போக்குவரத்து சீரானது.
ரயில் மோதி பெண் பலி
ஈரோடு: பெருந்துறை - ஈங்கூர் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில், 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. திருப்பூர் மற்றும் ஈரோடு ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, பெருந்துறை அரசு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சரக்கு ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. இறந்த பெண் யார், எந்த
ஊர் என ஈரோடு ரயில்வே போலீசார்
விசாரிக்கின்றனர்.
வீட்டில் நகை திருட்டு
பெருந்துறை: கம்புளியம்பட்டி, அன்பு நகரை சேர்ந்தவர் பீர் முகமது, 42; குடும்பத்துடன் வெளியூர் சென்ற இவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த, இரண்டு பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்படி பெருந்துறை போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
நம்பியூர்: நம்பியூர் அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தனசெய்குமார் குப்தா, 25; நம்பியூரில் உள்ள ஸ்பின்னிங் மில் விடுதியில் தங்கி பணிபுரிந்தார். கடந்த, 12ம் தேதி காலை சக பணியாளர்களுடன், விடுதியில் பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நம்பியூர் போலீசார் வழக்குப்பதிந்து, இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
வைத்தியம் பார்ப்பதாக கூறி
விவசாயியிடம் பணம் பறிப்பு
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 58; விவசாயி. கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நாட்டு வைத்தியர் என்று கூறி, குமாரசாமியை ஒருவர் சந்தித்துள்ளார். அப்போது குமாரசாமி, அவர் மனைவி, மகனிடம் ஒரு பொடியை கலந்து, கால் மற்றும் உடலில் தடவியுள்ளார். சிறிது நேரத்தில் மூவரும் சுய நினைவை இழந்துள்ளனர். வீட்டில் வைத்திருந்த, 48 ஆயிரம் ரூபாய், அரை பவுன் தங்கத்தோட்டை அவர்களே அந்த நபரிடம் கொடுத்தனராம். சிறிது நேரம் கழித்து நினைவு வந்த பிறகே, நுாதனமாக மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளனர். குமாரசாமி புகாரின்படி சென்னிமலை போலீசார், 'கில்லாடி' நாட்டு வைத்தியரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE