காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன், 12ல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
இதனால், பல மாதங்களுக்கு பின், காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் வாய்ப்புள்ளது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில், காவிரி ஆறு ஓடும் கரூர் தாலுகா, கிருஷ்ணராய புரம் தாலுகா, குளித்தலை, புகழூர் தாலுகா, பகுதிகளில் பொதுமக்கள் நாள்தோறும் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் செல்வர். குறிப்பாக, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான தளவாப்பாளையம், நெரூர், வாங்கல், திருமாக்கூடலுார், கட்டளை, மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள், காவிரி ஆற்றில் குளித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் பல இடங்களில், 10 அடிக்கும் ஆழமாக குழிகள் உள்ளன. தற்போது, குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள, 1,500 கனஅடி தண்ணீர் ஆற்றில் செல்வதால் குழிகள் மறைந்துள்ளன.
அதில், விபரம் தெரியாமல் பொதுமக்கள் இறங்கி குளிக்கும் போது, புதை மணலில் சிக்கி உயிரிழக்க வாய்ப்புண்டு. மணல் எடுக்கப்பட்ட இடங்கள் குறித்த தகவல், பொதுப்பணிதுறை, வருவாய் மற்றும் உள்ளூர் போலீசாருக்கு நன்கு தெரியும். அந்த இடங்களை உடனடியாக கண்டறிந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காவிரி ஆற்றுப்பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை உடனடியாக வைக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE