பண்ருட்டி: பண்ருட்டி அருகே வீடு இல்லாததால், மாற்றுத்திறனாளி பெண் இரண்டு பிள்ளைகளுடன் திறந்த வெளியில் வசிக்கிறார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி, சித்திரைசாவடி இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் மனைவி நிர்மலா, 30; இரு கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளி.சலவை தொழிலாளியான சண்முகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காசநோயால் இறந்தார். இவர்களுக்கு கிஷோர், 10; கமலேஷ், 7, என இரு பிள்ளைகள் உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வந்த நிர்மலா தனது பிள்ளைகளை கடந்த 2 ஆண்டுகளாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் வளர்த்து வருகிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர், வாடகை இருந்த வீடு வேறு நபர் விலைக்கு வாங்கினார். புதிய வீட்டு உரிமையாளர், கடந்த 20 நாட்களுக்கு முன் நிர்மலாவை வீட்டை காலி செய்து வெளியே அனுப்பினர். அவருக்கு வாடகை வீடு வழங்க யாரும் முன் வராததால் அதே தெருவில் ஆதி என்பவரின் வீட்டின் தென்னை மரத்தின் அடியில் திறந்த வெளியில் வசித்து வருகிறார். கிராம மக்கள் சார்பில் நிர்மலாவிற்காக புறம்போக்கு நிலத்தில் சிறிய அளவில் சிமென்ட் ஒடு போட்ட வீடு கட்ட ஏற்பாடு செய்து, பாதியில் நிற்கிறது. அதில் கதவு, ஜன்னல், மின் இணைப்பு தேவைப்படும் நிலையில் திறந்த வெளியில் நிர்மலா தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
கருணை உள்ளம் கொண்டவர்கள் அவரது வீட்டிற்கான கட்டுமானப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை 94866 20743 என்ற எண்ணில் நிர்மலாவை தொடர்புகொண்டு உதவிடலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE