மாரியம்மன் பண்டிகை
இன்று நிறைவு
நாமகிரிப்பேட்டை, மே 14-
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் தேர்திருவிழா, 2 ஆண்டுகளுக்கு பின், கடந்த, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. தினந்தோறும் ஒரு கட்டளைதாரர்கள் மூலம் மண்டகப்படி மற்றும் சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தன. இந்நிலையில், கடந்த புதன்கிழமை கால, தீமிதி விழாவும், மாலை தேர் திருவிழாவும் நடந்தது. நேற்று முன்தினம் அப்பளம் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், மண்டகப்படி நடந்தது.
தொடர்ந்து சத்தபரணமும், நேற்று காலை பஸ் நிலையம் அருகே வாணவேடிக்கையும் நடந்தது. தொடர்ந்து, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீராடலுடன் தேர் திருவிழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் அன்பழகன், செயல் அலுவலர் நந்தகுமார் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
மருத்துவ முகாம்
குமாரபாளையம், மே 14-
குமாரபாளையம் எதிர்மேடு சத்யா நகர் அன்னை ஆதரவற்றோர் மையத்தில், இலவச பொதுமருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. முகாம் நிர்வாகி ஹேமமாலினி தலைமை வகித்தார்.
இதில் ரத்த அழுத்தம், கண் சிகிச்சை, இதயநோய், மூட்டுவலி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
டூவீலர் மோதியதில்
இருவர் படுகாயம்
குமாரபாளையம், மே 14-
குமாரபாளையம் அருகே குளத்துக்காடு பகுதியில் வசிப்பவர் கலாமணி, 57. தறி கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், அதே பகுதியில் சாலையை கடக்கும்போது, டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் வந்த நபர், அவர் மீது மோதியதில், அவரும், கீழே விழுந்ததில், டூவீலரில் வந்தவரும் படுகாயம் அடைந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டூவீலரை ஓட்டி வந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பன்னீர்செல்வம், 55, என்று தெரிய வந்தது. விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோடை விடுமுறையால் உற்சாகம்
நாமக்கல், மே 14-
ஒன்று முதல், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இன்று (மே 14) முதல், ஜூன், 12 வரை, கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி., அரசு பொதுத்தேர்வு தற்போது நடந்து வருகிறது. முதல் கட்டமாக பிளஸ் 2 தேர்வு, கடந்த, 5ல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, கடந்த, 6ல், பிளஸ் 1 தேர்வு, கடந்த, 10ல் துவங்கியது.
இந்நிலையில், ஒன்று முதல், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டு இறுதித் தேர்வு, கடந்த, 5ம் தேதி துவங்கி, கடைசி நாளான நேற்று, உடற்கல்வி தேர்வு நடந்தது. ஒன்று முதல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 14 (நேற்று) முதல், ஜூன், 12 வரை, கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஜூன், 24ல், பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி, கோடை விடுமுறை இன்று (மே, 14) முதல் துவங்குகிறது. நேற்று மாலையில், தேர்வு முடித்து வெளியே வந்த மாணவ, மாணவியர், ஒருவர் மீது ஒருவர் சட்டையில் இன்ங் அடித்துக் கொணடும், வண்ணசாயம் பூசியும், விடுமுறையை உற்சாகமாக துவக்கினர்.
நாமக்கல் சித்தி விநாயகர்
கோவில் கும்பாபிேஷகம்
நாமக்கல், மே 14-
நாமக்கல்லில் சர்வ சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
நாமக்கல்-மோகனுார் சாலை, காந்திநகரில் அமைந்துள்ள சர்வ சித்தி விநாயகர் கோவில் சீரமைக்கப்பட்டு, நேற்று காலை கும்பாபிேஷகம் நடந்தது. அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அன்று மாலை புண்ணியாகவாசனம், வாஸ்து, கங்கணம் கட்டுதல் மற்றும் முதல்கால யாக பூஜை நடந்தது.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாஹீதியும், 6:00 மணிக்கு கோபுர கலசத்திற்கும், தொடர்ந்து சர்வ சித்தி விநாயகருக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னையில் ஆர்ப்பாட்டம்
அச்சகங்களுக்கு இன்று 'லீவ்'
நாமக்கல், மே 14-
'சென்னையில் நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில், அச்சகங்கள் இன்று (மே 14), செயல்படாது' என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காகிதம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கையை, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் சார்பில், இன்று (மே 14), சென்னை வள்ளுவர் கோட்டத்தில், காலை, 9.30 மணிக்கு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அச்சகங்கள் முழு அடைப்பு செய்யப்படுகிறது.
'சென்னையில் நடக்கும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், அச்சக உரிமையாளர்கள், அதன் ஊழியர்கள் கலந்து கொள்வதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அச்சகங்கள், இன்று (மே 14) ஒரு நாள் அடைக்கப்படுகிறது' என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
டூவீலர் மீது கார் மோதி
சமையல்காரர் படுகாயம்
குமாரபாளையம், மே 14-
குமாரபாளையம் அருகே கத்தேரி சாமியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 57, சமையல் வேலை செய்பவர். இவர் நேற்று முன்தினம் காலை, 8:00 மணியளவில், சேலம்- கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் டி.வி.எஸ்., எக்ஸல் வாகனத்தில் சாலையை கடக்கும்போது, சேலம் சாலையில் வந்த 'பிரீஜா' கார், டூவீலர் மீது மோதியது. இதில் சீனிவாசன் படுகாயம் அடைந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிவைரர், திருச்செங்கோடு, கருவேப்பம்பட்டியைச் சேர்ந்த ஜெயகுமார், 43, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
நாய் குறுக்கே வந்து
பெண் பரிதாப பலி
எருமப்பட்டி, மே 14-
நாமக்கல் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் வாசுகி, 55. இவர், கொப்பம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து, நேற்று காலை இவரது மகன் சதீஷ்குமார், இரு சக்கர வாகனத்தில் நாமக்கல்லிற்கு அழைத்து வந்தபோது, அலங்காநத்தம் அருகே நாய் குறுக்கே வந்துள்ளது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்த தாய், மகன் இருவரும் கீழே விழுந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த வாசுகி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் கவிழ்ந்து விபத்து
உயிர்தப்பிய பயணிகள்
மல்லசமுத்திரம், மே 14--
வையப்பமலை அருகே தனியார் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி, 20 பயணிகளுடன் சென்ற தனியார் பஸ், வையப்பமலை அடுத்த, மொஞ்சனுார் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது குறுக்கே ஸ்கூட்டி வந்ததால், பஸ் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து, கம்பத்தின் மீது சாய்ந்து நின்றது. இதில், பஸ்சில், பயணித்த 10க்கும் மேற்பட்டோருக்கு, லேசான காயங்கள் ஏற்பட்டன. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இதுகுறித்து எலச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE