'வரலாறு காரணாத வகையில், பருத்தி நுால் விலை, 100 சதவீதம் உயர்ந்துள்ளதால், விசைத்தறி தொழில் முடங்கி உள்ளது,'' என்று வெண்ணந்துார் விசைத்தறி சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறினார்.
இதுகுறித்து கூறியதாவது:
தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் உள்பட, 10 மாவட்டங்களில், விசைத்தறி தொழில், பிரதான தொழிலாக விளங்குகிறது. இத்தொழில், தற்போது பெரும் நெருக்கடியில் உள்ளது.
2021, அக்டோபரில், 40ம் நெம்பர் நுால், ஒரு சிப்பம் (50 கிலோ), 9,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அது, படிப்படியாக உயர்ந்து, தற்போது, 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம், விசைத்தறி தொழிலையே புரட்டிப்போட்டுள்ளது. இந்த நுால் விலை ஏற்றத்தால், நெசவாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். நுால் விலை உயர்ந்துள்ள நிலையில், ஜவுளி விலையை உயர்த்த முடியாத நிலைக்கு, உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், நுால் விலை ஏற்றம் காரணமாக, பல பகுதிகளில், விசைத்தறிக்கூடங்கள் செயல்படாமல், மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக, தமிழகத்தில், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மத்தியில், 2003ல், ஆட்சியில், விசைத்தறி தொழிலுக்கு சென்வாட் என்ற பல அடுக்கு வரி விதிக்கப்பட்டது. அதேபோல், பருத்தி நுாலுக்கு, 11.2 சதவீதம் வரி விதித்தது. அதனால், விசைத்தறி தொழில் முடங்கியது. மேலும், விசைத்தறி கூடங்கள் மூடுவிழா காணப்பட்டது.
ஆட்சி மாற்றத்தின் காரணமாக, 2004ல், சென்வாட் வரி மற்றும் பருத்தி நுாலுக்கான, 11.2 சதவீதம் வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. 2004 முதல், 2014 வரை, விசைத்தறி தொழில் நல்ல முறையில் இயங்கி வந்தது.
இதற்கிடையில், 2014ல், மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பணம் மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., வரி போன்ற காரணங்களினால், விசைத்தறி தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டது.
மேலும், கொரோனா தொற்று காரணமாக, தொழில் முடங்கியது. தற்போது, வரலாறு காரணமாக வகையில், பருத்தி நுால் விலை, 100 சதவீதம் உயர்ந்துள்ளதால், விசைத்தறி தொழிலை முடக்கி போட்டுள்ளது.
விசைத்தறி தொழில் மீண்டும் எழுச்சி பெறவும், ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், நுால் விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், அதன் விலையை குறைக்கவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE