செய்திகள் சில வரிகளில்... கிருஷ்ணகிரி| Dinamalar

செய்திகள் சில வரிகளில்... கிருஷ்ணகிரி

Added : மே 14, 2022 | |
பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த புலிக்கல் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள புலிக்கல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடந்தது.சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த புலிக்கல் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள புலிக்கல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடந்தது.சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். பாலக்கோடு தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் சத்யபிரியா, ஆர்.ஐ., முருகன், வி.ஏ.ஓ சாம்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பர்கூர் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கடந்த, 7ல், இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த, 91 பேருக்கு டி.எஸ்.பிக்களாக பதவிஉயர்வு அளித்து தமிழக அரசு அறிவித்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் டி.எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு பெற்றனர். பர்கூர் டி.எஸ்.பி., தங்கவேல் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சூளகிரி இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மனோகரன் நியமிக்கப்பட்டார். நேற்று பர்கூர் புதிய டி.எஸ்.பி.,யாக மனோகரன்
பதவியேற்று கொண்டார்.
அரசு பள்ளிக்கு டெஸ்க் - பெஞ்ச் வழங்கல்
அரூர்: அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 செட் டெஸ்க் -பெஞ்ச்சுகளை, அரூர், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேற்று வழங்கினார். ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் முருகன், சிவன், சாமிக்கண்ணு உட்பட, பலர் பங்கேற்றனர்.
வாரச்சந்தை ரூ.11.26 லட்சத்துக்கு ஏலம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கராப்பட்டி பஞ்., புழுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமையில் சந்தை நடக்கிறது. இந்நிலையில், வாரச்சந்தையில், 2022-23ம் ஆண்டிற்கான நுழைவுக்கட்டணம் வசூல் செய்வதற்கான குத்தகை ஏலம் கடந்த ஏப்ரல், 4ல், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. அரூரைச் சேர்ந்த சாமுவேல், 10.22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலம் முடிந்த ஏழு நாட்களுக்குள் ஒருவர், 10 சதவீதம் கூடுதலாக பணம் கட்டியதால், மறு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு மறு ஏலம் நடந்தது. இதில், செட்டிப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர், 11 லட்சத்து, 26 ஆயிரத்து, 700 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
கட்டுமான பணி: தளி எம்.எல்.ஏ., ஆய்வு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 15 வது நிதிக்குழு மானியத்தில் இருந்து, கூடுதல் கட்டடங்கள் கட்ட, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, தளி இ.கம்யூ.,- எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, கெலமங்கலம் ஒன்றிய அலுவலக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, அதே இடத்தில், 3 கோடியே, 10 லட்சத்து, 60 ஆயிரம் மதிப்பில், புதிதாக கட்டப்படும் ஒன்றிய அலுவலக கட்டுமான பணியை, எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகள் தொய்வடைந்துள்ளதால், விரைந்து பணியை முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர் மற்றும் பி.டி.ஓ.,
ஆகியோரை கேட்டுக்கொண்டார்.
உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை பகுதிகளில் ஊராட்சி வார்டு
உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடக்கிறது. கிருஷ்ணகிரியில் நடந்த பயிற்சியை மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம் துவக்கி வைத்து பயிற்சி உபகரணங்களை வழங்கினார். பி.டி.ஓ., சாந்தி தலைமை வகித்தார். அகசிப்பள்ளி, இட்டிக்கல் அகரம், பையனப்பள்ளி, ஆலப்பட்டி, பெல்லம்பள்ளி உட்பட, 15 பஞ்.,களின் வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சியாளர்கள் தமிழரசி, முதன்மை பயிற்சியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
குழந்தை திருமண தடுப்பு
விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு ஆடவர் கலைக்கல்லூரி, உட்பட ஏழு கல்லூரி மாணவிகள், ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட, ஆயிர-த்திற்கும் மேற்பட்டோர் குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர். தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, கூடுதல் எஸ்.பி., சங்கு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், டி.எஸ்.பி., விஜயராகவன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வி.ஏ.ஓ.,க்களுக்கு புத்தாக்க பயிற்சி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் மொத்தம், 69 வி.ஏ.ஓ.,க்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில், நில அளவை தொடர்பான, ஒரு வார புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது. தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன், பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். உட்பிரிவு ஆவணங்கள் தயாரித்தல், முழு புலம் அளத்தல் போன்ற பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர்கள் சரவணன், ஆறுமுகம், மறு நில அளவை திட்ட பணி ஆய்வாளர் ராமச்சந்திரன், சார் ஆய்வாளர் முகமது முஜிப் ஆகியோர், வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
மா.கம்யூ., மனு கொடுக்கும் போராட்டம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில், நீர்நிலைகள் மற்றும் கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், நேற்று காலை மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. சூளகிரி வட்ட செயலாளர் முனியப்பா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
* அரூரில், சொத்துவரி உயர்வை கண்டித்து மா.கம்யூ., கட்சி சார்பில், நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில், டவுன் பஞ்., செயல் அலுவலர் கலைராணியிடம் மனுக்களை அளித்தனர். கோவிந்தன், மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் கட்டப்பட்டது. இதை நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கடத்தூர் யூனியன் தென்கரை கோட்டையில்,
9 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மாவட்ட பஞ்., தலைவர் யசோதா, ஒன்றிய செயலாளர் மதிவாணன், யூனியன் சேர்மன் உதயா, நிர்வாகிகள் முருகன், சந்தோஷ்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யோகா பயிலரங்கம்; சான்றிதழ் வழங்கல்
கிருஷ்ணகிரி: ஓசூர் மண்டல உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில், யோகா பயிலரங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மனவளக்கலை மன்ற நிர்வாக அறங்காவலர் சண்முகம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். ஓசூர் மனவளக்கலை மன்ற மண்டலத் தலைவர் ராஜூ, கணினி அறிவியல் துறைத் தலைவர் லாவண்யா, தமிழ்த்துறைத் தலைவர் சிவகாமி ஆகியோர் பேசினர்.
தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜசிம்மவர்மன், மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். மனவளக்கலை மன்ற பொறுப்பாசிரியர் மகாலிங்கம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வள்ளிசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தன. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.
ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், இன்று காலை, 10:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரை பொதுவினியோகத் திட்ட பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், 8 தாலுகாவில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படும். அதன்படி கிருஷ்ணகிரி வட்டத்தில், சிக்கபூவத்தியிலும், ஊத்தங்கரை- வெள்ளிமலை, போச்சம்பள்ளி- அகரம், பர்கூர்-காளிகோவில், சூளகிரி- கரியசந்திரம், ஓசூர்- சென்னசந்திரம், தேன்கனிக்கோட்டை- பேளகொண்டப்பள்ளி, அஞ்செட்டி- தக்கட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் குறை தீர் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நதிநீர் பாதுகாப்பு இயக்கம் ஆலோசனை
ஓசூர்: ஓசூரில் நதிநீர் பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். அகில பாரதிய துறவிகள் சங்க துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா, சுவாமி சங்கர சக்தானந்தா முன்னிலை வகித்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக, செங்கல்பட்டு வரை பாலாறு பெருவிழா ரத யாத்திரை செல்கிறது. ஓசூருக்கு நாளை வருகை தரும் ரத யாத்திரைக்கு, மாநில எல்லையில் வரவேற்பு அளித்து, சிறப்பு பூஜைகள் செய்வது என, முடிவு செய்யப்பட்டது. இந்திய மருத்துவ சங்க ஓசூர் கிளை தலைவர் டாக்டர் பிரதீப்குமார், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில்
கைக்குழந்தையுடன் பஞ்., தலைவி தர்ணா
போச்சம்பள்ளி, மே 14-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, ஜிங்கல்கதிரம்பட்டி பஞ்., தலைவி லட்சுமி, 32. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்.,க்கு உட்பட்ட பந்தரஹள்ளி காலனிக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை, அப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டிற்காக ஒதுக்கி தருமாறு பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்; நேரில் சென்றும் வலியுறுத்தினார்.
அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரால் மக்களுக்கு பதில் கூற முடியவில்லை. ஆத்திரமடைந்த அவர் நேற்று மாலை, 5:30 மணியளவில், போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்துக்கு தன் ஒரு வயது கைக்குழந்தையுடன் வந்தார். அலுவலகத்தின் உள் பகுதியில் நடுவில், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், தாசில்தார் இளங்கோ உரிய நடவடிக்கை எடுத்து இடம் ஒதுக்கி தருவதாக உறுதியளித்தார். அதன் பின் தர்ணாவை கைவிட்டு கிளம்பினார். சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழா
கிருஷ்ணகிரி, மே 14-
கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில், 400 ஆண்டு பழமை வாய்ந்த சங்கல்தோப்பு தர்காவில் கடந்த, 11ல் அனைத்து ஜமாத்தார் முன்னிலையில் உரூஸ் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அன்று இரவு கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை மக்கானில் இருந்து, அனைத்து ஜமாத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் நவாப் தலைமையில், சந்தனகுடம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சங்கல்தோப்பு தர்கா சென்றடைந்தது.
இவ்விழாவில், தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் மட்டுமின்றி, சாதி மத பேதமின்றி ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று கிருஷ்ணகிரி மலை மீது உள்ள தர்காவிற்கு ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.
சாலையோர கடை வியாபாரிகள் மனு
தர்மபுரி, மே 14-
பொ.மல்லாபுரத்தில் சாலையோரம் உள்ள கடைகளை காலி செய்ய, டவுன் பஞ்., நிர்வாகம் உத்தரவிட்டதால், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், 'இப்பகுதியில், 70 க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த கடைகளை காலி செய்ய வேண்டுமென, பொ.மல்லாபுரம் டவுன் பஞ்., சார்பில் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், கடைகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில், நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் டவுன் பஞ்., ஊழியர்கள் கடைகளை அகற்ற சென்றனர். இதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி அறிவுறுத்தலின்படி, இங்கு செயல்பட்டு வரும் கடைகளை அகற்றக்கூடாது என, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பூட்டிய வீட்டில்
10 பவுன் திருட்டு
பாப்பாரப்பட்டி, மே 14-
பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனூரை சேர்ந்தவர் சரவணன், 35; தனியார் பால் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி, 31; தனியார் பள்ளி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் காலையிலே பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில், கணவர் நண்பகல், 1:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். பள்ளி முடிந்து மாலை ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்த போது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து, 10 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பஞ்சாலை பெண் தொழிலாளர்கள்
பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம்
தர்மபுரி, மே 14-
திருப்பூர், மக்கள் அமைப்பு மாநில அமைப்பாளர் பிரித்திவிராஜ் தலைமை வகித்து பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டும், பல்வேறு துன்புறுத்தல் குறித்து, நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பஞ்சாலைகளில் பணிபுரியும் சில பெண்கள், தங்களது துன்புறுத்தல்களை விளக்கினர்.
உணவு, பணி சுதந்திரம், நேரக்கட்டுப்பாடு, இரவு நேர பணி உள்ளிட்ட பல்வேறு பணிச்சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதை களைய, நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ரியல் பவுண்டேசன் மாவட்ட அமைப்பாளர் செந்தில்ராஜா, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் ஆசியஜோதி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, மே 14-
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ரதி முன்னிலை வகித்தார்.
இதில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜன., முதல், தற்போது வரை மூன்று சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு, 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்து, பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் சுதர்சனன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பிளஸ் 2 பொது தேர்வு
1,545 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
கிருஷ்ணகிரி, மே 14-
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு கடந்த, 5ம் தேதி தொடங்கி வரும், 28ம் தேதி வரை நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 106 அரசுப்பள்ளி, 1 அரசு உதவி பெறும் பள்ளி, 79 தனியார் பள்ளிகள் என மொத்தம், 186 பள்ளிகளை சேர்ந்த, 11 ஆயிரத்து, 158 மாணவர்கள், 11 ஆயிரத்து, 321 மாணவியர் உட்பட, 22 ஆயிரத்து, 479 பேருக்கு தேர்வு நடக்கிறது. 79 தேர்வு மையங்களில் நேற்று வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வு
நடந்தது. இதில், 1,545 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X