குளித்தலை மற்றும் தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கனகாம்பரம் பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதில் சிவப்பு, மஞ்சள், டில்லி கனகாம்பரம் மற்றும் பச்சை கனகாம்பரம் ரகங்கள் உள்ளன. இதில் பச்சை நிற கனகாம்பரம் பூக்கள் அழகிற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது.
நல்ல வடிகால் வசதி உள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் உள்ள நிலங்களில், ஆவணி மாதத்தில் இருந்து, தை மாதம் வரை கனகாம்பரம் பூ சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடிக்காக தேர்வு செய்துள்ள நிலத்தை, 2 முதல் 3 முறை நன்றாக உழுது பண்படுத்தி, கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு, 25 டன் அளவிற்கு மக்கிய உரமிட்டு, மண்ணுடன் கலந்துவிட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு, 5 கிலோ விதை தேவைப்படும் நிலையில், தேவைக்கேற்ப பாத்திகள் அமைத்து தகுந்த இடைவெளிகள் விட்டு விதைகளை விதைக்க வேண்டும். கனகாம்பரம் சாகுபடி செய்யும் நிலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வேர் அழுகல் நோய் ஏற்படும் என்பதால் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. ஆனால், நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும். செடிகளை நட்டு, 3 மாதங்களுக்கு பின், ஒரு ஏக்கருக்கு, 75 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிசத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்ககூடிய உரங்களை இட வேண்டும். இதேபோல் ஒவ்வொரு, 6 மாத கால இடைவெளியில் தொடர்ந்து, 2 ஆண்டுக்கு உரங்களை இட வேண்டும். மேலும், 3 மாதம் கழித்து அஸ்கார்பிக் அமிலம், 1,000 பி.பி.எம்., என்ற அளவில் தெளித்தால் மகசூல் அதிகரிக்கும்.
இதேபோல், டில்லி ரக கனகாம்பரத்திற்கு செடிகள் நட்டு, 30 நாட்களுக்கு பின் ஒரு ஏக்கருக்கு, 250 கிலோ வேப்பம் புன்னாக்கு, 40 கிலோ தழைச்சத்து உரங்களை இடவேண்டும். செடிகள் வளர்ந்தவுடன் களைகள் அதிகமாக தோன்றாது என்பதால் செடிகள் நட்டு முதல் மாதத்தில் ஒரு முறை களை எடுக்க வேண்டும். நிலத்தில் ஈரப்பதம் இருக்கும் போது, செடிகளின் வேர்பகுதியில் போரேட் அல்லது கார்போப்யூரான் என்ற குருணை மருந்தை இடும்போது, நுாற்புழு நோயை கட்டுப்படுத்தலாம். இதேபோல், வாடல் நோய் தென்பட்டால், 1 லிட்டர் நீரில், 1 கிராம் வீதம் எமிசான் மருந்தினை கரைத்து செடிகளின் வேர் பாகத்தில் ஊற்றிவிட்டால் வாடல் நோயிலிருந்து செடிகளை பாதுகாக்கலாம்.
மேலும், அசுவினி
பூச்சிகளை கட்டுப்படுத்த டைமித்தோயேட் மருந்தினை, 1 லிட்டர் நீருக்கு, 1 மில்லி வீதம் கலந்து கனகாம்பரம் செடிகளில் தெளிக்க வேண்டும். செடிகள் நட்டு ஒரு மாதம் கழித்து பூக்கள் பூக்க தொடங்கிவிடும். இதில் நன்றாக மலர்ந்த மலர்களை, 2 நாட்களுக்கு ஒருமுறை பறித்து வர வேண்டும். ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்கரில், 2,000 கிலோ வரை பூக்கள் கிடைக்கும் என்றும், டில்லி கனகாம்பரம் ஒரு ஆண்டுக்கு, 2,800 கிலோ மகசூல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE