நாமகிரிப்பேட்டையில் நடந்த தென்னிந்திய கபாடி போட்டியில், தமிழக போலீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டியில் இளையவர் சடுகுடு கிளப் சார்பில், கடந்த, 61 ஆண்டுகளாக மாநில அளவிலான கபாடிப் போட்டியை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு தென்னிந்திய அளவிலான போட்டியை நடத்தினர். இதில், 80க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
பேங்க் ஆப் பரோடா, போலீஸ் அணிகள், ரயில்வே, இன்கம்டாக்ஸ் அணி உள்பட, தென்னிந்திய அளவில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்ததால், ஆடுகளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகளை நடத்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று காலை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போட்டிகளை நடத்தி முடித்தனர்.
முதல் அரையிறுதிப் போட்டியில், பேங்க் ஆப் பரோடா, சென்னை சிட்டி போலீஸ் சென்னை அணியும் மோதின. இதில், சிட்டி போலீஸ் அணி, 36 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில், சென்னை இன்கம்டாக்ஸ் அணியும், தமிழக போலீஸ் அணியும் மோதின. இதில், தமிழக போலீஸ் அணி, 48 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. பின் நடந்த இறுதி போட்டியில், தமிழக போலீஸ் அணியும், சென்னை சிட்டி போலீஸ் அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், தமிழக போலீஸ் அணி, 42 புள்ளிகள் பெற்று, தென்னிந்திய கபாடிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் எம்.பி., சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, இளையர் சடு குடு நிர்வாகிகள் மணி, பூபதி, அருள், நடேசன் ஆகியோர் ரொக்க பரிசு மற்றும் கோப்பையை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE