'நேர்மை' டிரைவருக்கு பாராட்டு
தலைவாசல்: தலைவாசலை சேர்ந்தவர் அலி, 50. இவர், தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார். நேற்று, தலைவாசலில் இருந்து மும்முடிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையில், 'மணிபர்ஸ்' கிடந்ததை பார்த்து எடுத்து, தலைவாசல் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், மும்முடியை சேர்ந்த செந்தமிழ்செல்வி, 40, மகளிர் குழுவுக்கு பணம் கட்ட, 7,000 ரூபாய் எடுத்துச்சென்றபோது தவறவிட்டது தெரிந்தது. இதையடுத்து, அந்த பணத்தை, செந்தமிழ்செல்வியிடம், போலீசார் ஒப்படைத்தனர். அலியை, போலீசார் பாராட்டினர்.
மின்சாரம் பாய்ந்து பெண் பலி
சேலம்: கொண்டலாம்பட்டி, பி.நாட்டாமங்கலம், காட்டூர் சிலோன் காலனியை சேர்ந்த விஜயகுமார் மனைவி ஜமுனாதேவி, 42. நேற்று காலை, 10:00 மணிக்கு, துணிகளை காய வைக்க, வீடு முன் இருந்த கம்பி மீது போட முயன்றார். அப்போது, மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவியை மணம்புரிந்தவர் கைது
சேலம்: கருப்பூர், கருமலைக்காட்டை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 25. இவர், ஒரு மாதத்துக்கு முன், ஓமலுாரை சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக, கருப்பூர் போலீசார் விசாரித்து, சவுந்தரராஜனை நேற்று கைது செய்தனர்.
பணம் பறித்த 3 பேருக்கு 'காப்பு'
சேலம்: சன்னியாசிகுண்டை சேர்ந்தவர் விஜய், 27. நேற்று முன்தினம், எருமாபாளையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த, 3 பேர், விஜயிடம் கத்தியை காட்டி மிரட்டி, 1,700 ரூபாயை பறித்துக்கொண்டனர். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்ததில், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த சாரதி, 25, மணிகண்டன், 24, காதர் உசேன், 27, என தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர். அந்த மூன்று பேரும், ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என, போலீசார் தெரிவித்தனர்.
தீ விபத்தில் சிறுமி காயம்
சேலம்: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு மகள் பூவிழி, 17. சேலம், குகை பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம், வீட்டில் உள்ள ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் பூவிழி காயமடைய, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
126 கேமரா செயல்பாடு தொடக்கம்
சேலம்: அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட தண்ணீர்தொட்டி பஸ் ஸ்டாப், பாலாஜி நகர், செங்கல் அணை சாலை சந்திப்பு, மாருதி நகர், அதிகாரிப்பட்டி, குமரகிரிபேட்டை பஸ் ஸ்டாப் உள்பட, 31 இடங்களில், 126 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் செயல்பாட்டை, போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா, நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் கூறுகையில், 'அம்மாபேட்டை பகுதிகளில் ஏற்கனவே, 132 கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் இங்கு வணிகர்கள் அதிகளவில் கேமராக்கள் நிறுவ வேண்டும்' என்றார். துணை கமிஷனர் மாடசாமி, போலீசார் பங்கேற்றனர்.
தீயால் உயிரை மாய்த்த முதியவர்
கெங்கவல்லி: தெடாவூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் அங்கமுத்து, 80. அவரது மனைவி, 15 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. தனிமையில் இருந்த அங்கமுத்து, நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், நேற்று அவர் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
மணல் கடத்தல்; லாரி பறிமுதல்
மேச்சேரி: அரங்கனுாரில் மணல் கடத்துவதாக, வி.ஏ.ஓ., முருகனுக்கு புகார் சென்றது. இதையடுத்து, அவர், கல்கோட்டை மாமரத்து காட்டுவளவில் ஆய்வு செய்தார். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். லாரியில், வெள்ளை கற்களுடன் மண் எடுத்துச்சென்றது தெரிந்தது. வி.ஏ.ஓ., புகார்படி, மேச்சேரி போலீசார் டிப்பர் லாரியை கைப்பற்றி, நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE