ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் மது விற்பனை கனஜோர் கூடுதல் விலைக்கு சந்துக்கடைகளில் சரக்குகள் தாராளம்| Dinamalar

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் மது விற்பனை கனஜோர் கூடுதல் விலைக்கு சந்துக்கடைகளில் சரக்குகள் தாராளம்

Added : மே 14, 2022 | |
ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் டாஸ்மார்க் கடை இல்லாத நிலையில், திரும்பும் இடமெல்லாம் சந்து கடைகள் இருப்பதால் சரக்கு விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை


ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் டாஸ்மார்க் கடை இல்லாத நிலையில், திரும்பும் இடமெல்லாம் சந்து கடைகள் இருப்பதால் சரக்கு விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.
ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் ஒகேனக்கல்லில், பல்லாயிரக்கணக்கான சுற்றுலா
பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வருபவர்கள் அதிக அளவில் மது அருந்திவிட்டு குளிப்பதும், வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி, கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன், ஒகேனக்கல்லில் இருந்த டாஸ்மார்க் கடை மூடப்பட்டது. ஆனால், தற்போது ஒகேனக்கல்லில் திரும்பும் இடமெல்லாம் சந்துகடைகளில் மது விற்பனை கனஜோராக நடக்கிறது.
பென்னாகரம் அருகே உள்ள டாஸ்மார்க் கடைகளில் இருந்து, ஒரு பாட்டிலுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை கூடுதலாக கொடுத்து, ஒட்டுமொத்தமாக சரக்குளை வாங்கி வந்து, பாட்டிலுக்கு, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து, மீன் மார்க்கெட், நாகர் கோவில், முதலைப்பண்னை, ஊட்டமலை உள்ளிட்ட திரும்பும் இடமெல்லாம் படு ஜோராக மது விற்பணை நடந்து வருகிறது.
சுற்றுலா தலத்தில் எளிதில் மது கிடைப்பதால், அதை வாங்கி குடிக்கும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட இடத்தில் குளித்து, நீரில் மூழ்கி இறப்பது தொடர் கதையாகி வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், ஆண்டுக்காண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் குளிக்கும் இடத்திற்கு பாட்டில்களை எடுத்து சென்று உடைத்து வீசுகின்றனர். சிதறும் கண்ணாடி துண்டுகள், அப்பகுதியில் குளிப்பவர்களின் கால்களை பதம் பார்க்கிறது.
சந்துக்கடை விற்பனையை தடுக்க வேண்டிய போலீசார், மாமூலுக்கு ஆசைப்பட்டு, கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் ஒகேனக்கல் பகுதியில் குடிமகன்களின் ஆட்டமும் அதிகரித்துள்ளது. குடித்து விட்டு, போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சரக்கு விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். சரக்கு விற்பனைக்கு துணை போகும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X