ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க, மல்லமூப்பம்பட்டியில், 184.5 ஏக்கர் நிலத்தை, அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.
சேலம், அரியாகவுண்டம்பட்டி, மல்லமூப்பம்பட்டி, கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி அருகே அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று ஆய்வு செய்தார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெள்ளி கொலுசுகள் தயாரிக்கப்பட்டு, நாடு முழுதும் சிறு வியாபார தொழில்களுக்கு அனுப்பப்படுகின்றன. இப்பணியில், 50 ஆயிரம் தொழிலாளர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஈடுபடும் உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த, நிலையான இட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரியாகவுண்டம்பட்டியில் கொலுசு உற்பத்தியாளர்களுக்கு பல்நோக்கு கட்டடம் கட்ட, 1.20 ஏக்கர் இடம் தேர்வு செய்து, ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இக்கட்டடம் அமைவதன் மூலம், 2,000க்கும் மேற்பட்ட வெள்ளி தொழிலாளர் நேரடி வேலைவாய்ப்பை பெற முடியும்.
மல்லமூப்பம்பட்டியில், 184.5 ஏக்கர் நிலம் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதன் மூலம் நுால் பதனிடுதல், கஞ்சி தோய்த்தல், நெசவு, ஜவுளி உற்பத்தி, துணி பதனிடுதல், ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபடுவோர் பயன்பெறுவர். இதன்மூலம், 10 ஆயிரம் பேர் நேரடியாக, 40 ஆயிரம் பேர் வரை மறைமுகமாக பயன்பெற வாய்ப்புள்ளது. முதல்வரிடம் எடுத்துக்கூறி, விரைவில் இவை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE