கோடை மழையால் ஏற்பட்ட மின்தடையை பயன்படுத்திய மர்ம கும்பல், ரிக் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து, இந்திய மதிப்பில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கொள்ளையடித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, தலைவாசல், காட்டுக்கோட்டை நடுவீதியை சேர்ந்தவர் ராஜசேகர், 53. இவர், கென்யா, சவுதி நாடுகளுக்கு சென்றுவிட்டு, தற்போது ராஜஸ்தானில் ரிக் வண்டிக்கு வேலைக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கோடை மழையின்போது, ராஜசேகரின் மனைவி வளர்மதி, அருகில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று துாங்கியுள்ளார். இரவு, 10:00 முதல், காலை, 5:00 மணி வரை, மின்தடை ஏற்பட்டிருந்தது.
இதை சாதகமாக பயன்படுத்தி, நள்ளிரவில் வந்த மர்ம கும்பல், ராஜசேகர் வீட்டின் பூட்டை உடைத்துச்சென்று, 'டிராவல் பேக்'கை திறந்தனர். அதிலிருந்த, கென்யா நாட்டின், 'ஷில்லிங்' பணம், இந்திய மதிப்பில், 5,000 ரூபாய்; சவுதி நாட்டின், 'ரியால்' பணம், இந்திய மதிப்பில், 25 ஆயிரம் ரூபாய் என, 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச்சென்றது.
காட்டுக்கோட்டை தபால் நிலைய அலுவலகம், தபால் அலுவலரின் குடியிருப்பு வீடுகளின் பூட்டையும் உடைத்துள்ளனர். ஆனால், அங்கு பணம் இல்லை. தொடர்ந்து, அருகில் உள்ள எலக்ட்ரீஷியன் சுரேஷ், 37, வீட்டுக்கு சென்று பீரோவை உடைத்து, 2,000 ரூபாயை திருடிச்சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் குழுவினர், சம்பவ வீடுகளில் பதிவான கைரேகை குறித்து ஆய்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE