''தேர்தல் முடிந்ததும் சொத்து வரியை, 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். இது ஆரம்பம் தான். இன்னும் பஸ், பால் உள்ளிட்ட கட்டண உயர்வுகள் காத்திருக்கின்றன,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார்.
சேலம், மெய்யனுாரில், மாநகர அதி.மு.க., சார்பில், இலவச தையற்பயிற்சி மைய தொடக்க விழா, நேற்று நடந்தது. அதை, முன்னாள் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்த பின், நிருபர் களிடம் கூறியதாவது:
ஓராண்டு ஆட்சியில், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக, தி.மு.க.,வினர் பொய்யை பரப்பி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் பாதி கூட நிறைவேற்றவில்லை. படிக்காதவர் மட்டுமின்றி, படித்தவர் களையும் ஏமாற்றி வருகின்றனர்.
தி.மு.க., அரசு ஆட்சிக்கு வர ஆதரவளித்த அரசு ஊழியர்களுக்கு, 'பென்ஷன்' திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது நிதியமைச்சர் வாய்ப்பில்லை என்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில், 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று அவை வாய்மூடி மவுனம் சாதிக்கின்றன. தேர்தல் முடிந்ததும் சொத்து வரியை, 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். கொரோனா சூழலில் இது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது ஆரம்பம்தான். இன்னும் பஸ், பால் உள்ளிட்ட கட்டண உயர்வுகள் காத்திருக்கின்றன. தி.மு.க., அரசு திட்டங்களை செயல்படுத்துவதுபோல் அறிவித்து, மக்களை ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகர மாவட்ட செயலர் வெங்கடாஜலம், அமைப்பு செயலர் செம்மலை, சேலம் தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பகுதி செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், வார்டு செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE