திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இன்றி இறந்ததாக புகார் கூறி நர்ஸ் முருகலட்சுமி 36, உடலை பெற மறுத்துவிட்டனர். இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினர் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் சின்னத்தம்பி. ஹிந்து முன்னணி நிர்வாகி. இவரது மனைவி முருகலட்சுமி. திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வந்தார். மே 4ல் தலைவலி காரணமாக அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு மே 7 ல் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
மீண்டும் உடல்நிலை பாதித்ததால் மே 8 ல் அங்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மூளைச்சாவடைந்தார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தார் என புகார் எழுந்தது. நேற்று முன்தினம் அவர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், முறையான சிகிச்சை அளிக்காத டாக்டர் குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் நேற்றும் 2வது நாளாக அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கலெக்டர் விஷ்ணுவையும் சந்தித்து பேசினர். எந்த முடிவும் எட்டப்படாததால் உடலை வாங்கமறுத்து நேற்று மாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் உட்பட 70க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE