வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூ யார்க்: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு ஐநா., பாதுகாப்பு கவுன்ஸில் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன நாட்டில் ஜெனின் நகரில் முன்னதாக அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் பெண் நிருபர் ஷிரீன் அபு அக்லே சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளரான இவர் கொல்லப்பட்டது உலக அளவில் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.
ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில் பாலஸ்தீன பிரிவினைவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கடந்த மே 11-ம் தேதி இப்பகுதிக்குள் நுழைந்து அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். மேலும் அவருடன் செய்தி சேகரிக்கச் சென்ற மற்றொரு பத்திரிகையாளரான அலி அல் சமூடி துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நாப்டாலி பென்னெட் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். சம்பவம் நடந்த அன்று பாலஸ்தீன பயங்கரவாதப் படை இஸ்ரேல் பாதுகாப்புப் படைமீது அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் பத்திரிகையாளரின் மரணத்துக்கு பயங்கரவாத அமைப்புகளே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா., பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE