சென்னை:திருவள்ளூர் மாவட்டம் எண்ணுாரில், எரிவாயு மின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை, தமிழக மின் வாரியம் துவக்கியுள்ளது.
தமிழக மின் வாரியத்திற்கு, திருவள்ளூர் மாவட்டம் எண்ணுாரில்காலியிடம் உள்ளது. அங்கு 2,000 மெகா வாட் திறனில் எரிவாயு மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான எரிபொருளான எரிவாயு, பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், எண்ணுாரில் அமைத்துள்ள எல்.என்.ஜி.,எனப்படும், திரவ நிலை எரிவாயு முனையத்தில்இருந்து பெறப்பட உள்ளது.
எரிவாயு மின் நிலையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய, மின் வாரியம், 2021 டிசம்பரில், ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குழு அமைத்தது. அதில், பல்வேறு பிரிவுகளின் பொறியாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.அக்குழு, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலை எரிவாயு எடுத்து வரப்பட்டு, குழாய் வழித்தடத்தில் வினியோகம் செய்யப்பட இருப்பதால், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு, 7 ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும், எரிவாயு விலை சர்வதேச நிலவரங்களை பொறுத்து அடிக்கடி மாறும் என்றும், மின் வாரியத்திடம் அறிக்கை அளித்தது.
இந்நிலையில் தற்போது,எண்ணுார் எரிவாயு மின்நிலைய பணிகளை விரைந்து மேற்கொள்ள, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம், மின் வாரியம் சமீபத்தில் வழங்கியுள்ளது.அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்குள் அறிக்கை வழங்க உள்ளது. அதன் அடிப்படையில், விரிவான திட்ட அறிக்கை, கட்டுமான பணிக்கான, 'டெண்டர்' உள்ளிட்ட, அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE