சென்னை:'ஆண்டு தோறும் சொத்து வரியை உயர்த்துவது, தற்போதைய நடைமுறையில் சாத்தியமில்லை' என, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், கடந்த பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தவித்து வருகின்றன. இந்த சொத்து வரியை உயர்த்தும் அறிவிப்பை, தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்தது. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தாலும், அரசு உறுதியாக உள்ளது.
இதையடுத்து, சொத்து வரியை உயர்த்துவதில் ஏற்படும் சிக்கலை தீர்க்க, தமிழக அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, ஆண்டு தோறும் சொத்து வரியை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும் மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.இதற்கு, அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசின் இந்த முடிவு, நடைமுறைக்கு ஏற்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கூறியதாவது:சொத்து வரி உயர்வு என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிக மிக அவசியமான ஒன்று. ஆண்டு தோறும் வரியை உயர்த்திக் கொள்ளலாம் என்பதை, மேலோட்டமாக பார்த்தால் நல்லது என்று தோன்றும்.எதார்த்த நடைமுறையில் தற்போதைக்கு, இதை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. தற்போது, அரசு அறிவித்த சொத்து வரி உயர்வை அமல்படுத்த, ஒவ்வொரு சொத்துக்கான மதிப்பீட்டிலும், உயர்வு விகிதங்களை சேர்த்து கணக்கிட வேண்டும்.
உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து, உரிய எழுத்துப்பூர்வ ஆணையை ஒவ்வொரு உரிமையாளருக்கும் வழங்க வேண்டும். இதற்கான பணி தற்போது நடந்து வருகிறது.கணினி வாயிலாக மேற்கொண்டாலும், இந்த பணிகளை முடிக்க, இரண்டு மாதங்கள் ஆகும். அதன் பின் வசூல் பணியை மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் இந்த பணியை மேற்கொள்ளும் அளவுக்கு உள்ளாட்சிகளில் பணியாளர்கள், அலுவலர்கள் இல்லை.
வரும் ஆண்டுகளில் சொத்து வரி உயர்வு பணிகளில் ஈடுபடுவது சிரமம்.ஒரு சில மாநகராட்சிகளை தவிர்த்து, பெரும்பாலான உள்ளாட்சிகளில் இதை அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை. இதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE