சென்னை:மத்திய அரசின் புதிய மின் திட்டத்தின் கீழ், தமிழக மின் வாரியம் நடப்பாண்டில், 2,050 கோடி ரூபாய் செலவில் மின் வழித்தட பணிகளை மேற்கொள்ள உள்ளது.
மத்திய அரசு, மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தை, சமீபத்தில் துவக்கியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் சீராக மின் வினியோகம் செய்வதுடன், மின்சாரத்தை எடுத்து செல்லும் போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியம் சார்பில் மேற்கண்ட பணிகளை, 10 ஆயிரத்து, 790 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் மத்திய அரசின் சார்பில், 8,600 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.ஐந்து ஆண்டுகளுக்குள் திட்ட பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும். அந்த கால அவகாசத்திற்குள் பணிகளை முடித்து விட்டால், மத்திய அரசு வழங்கும் கடனில், 60 சதவீதம் மானியமாகி விடும்; அதை திரும்ப செலுத்த தேவையில்லை; மீதியை மட்டும் செலுத்தினால் போதும்.
மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மின் வழித் தடங்களில் மீட்டர் பொருத்துவது, புதிதாக மின் வழித்தடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, வாரியம் திட்டமிட்டுள்ளது.இந்த பணிகள், ஒவ்வொரு ஆண்டுக்கும் இலக்கு நிர்ணயித்து, அதற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி, மின் தேவை அதிகரித்து வரும் பகுதிகளில் நடப்பாண்டில், 26 ஆயிரத்து, 300 மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் பொருத்துவதுடன், மின் வழித்தடங்களும் அமைக்கப்பட உள்ளன.இந்த பணிகளுக்காக, 2,050 கோடி ரூபாய் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE