சென்னை:சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், முதற்கட்டமாக 500 பஸ்களில், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாட்டை, முதல்வர் ஸ்டாலின்துவக்கி வைத்தார்.
பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக, 'நிர்பயா' திட்டத்தின் கீழ், 2,500 மாநகர பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக, 500 பஸ்களில் பொருத்தப்பட்டுள்ளன.
மூன்று கேமராக்கள்
இவற்றின் செயல்பாட்டை, நேற்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.ஒவ்வொரு பஸ்சிலும், மூன்று கேமராக்கள், நான்கு அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறனில் இயங்கும், 'மொபைல் நெட்வொர்ட் வீடியோ ரெக்கார்டர்' போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.இந்த முழு அமைப்பும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும், கட்டுப்பாட்டு அறை வழியாக கண்காணிக்கப்படும். பயணியர், மற்றவர்களால் இடையூறு ஏற்படும் போதும், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதும், அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தி, அந்நிகழ்வுகளைப் பதிவு செய்யலாம்.
அவ்வாறு செய்யும் போது, கட்டுப்பாட்டு மையத்தில், பஸ்சில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவின் சில வினாடி முன் தொகுப்புடன், எச்சரிக்கை மணி ஒலிக்கும்.அதைத் தொடர்ந்து, நிலைமையை கண்காணித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆவன செய்வர்.
அவசர அழைப்புகள்
இத்திட்ட செயல்பாட்டின் போது, அவசர அழைப்புகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 31 பணிமனைகள், 35 பஸ் முனையங்கள் முழுதும் மைய கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான, வீடியோ பகுப்பாய்வு முறையும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் வழியாக, காணாமல் போனவர்களை கண்டறியவும், குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களை அடையாளம் காணவும் முடியும்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை முதன்மை செயலர் கோபால், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE